நடிகர் விஜய் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் அவரது சில படங்கள் சரியாக போகவில்லை. கேப்டன் விஜயகாந்துக்கு தம்பியாக செந்தூரபாண்டி படத்தில் நடித்த பிறகு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அடுத்து ரசிகன் தேவா கோயம்புத்தூர் மாப்ளே போன்ற படங்களில் நடித்த விஜய்க்கு, விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து லவ் டுடே பிரியமுடன் துள்ளாத மனமும் துள்ளும் பிரண்ட்ஸ் படங்களால் விஜய் முன்னணி நடிகராக மாறினார்.
திருமலை சிவகாசி திருப்பாச்சி கில்லி போக்கிரி படங்களால் ரஜினி கமல் வரிசைக்கு வந்தார் விஜய். இப்போது தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
இப்போது தனது 69வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்துடன் சினிமாவுக்கும் குட்பை சொல்லிவிட்டு, முதல்வர் நாற்காலியில் அமர திட்டமிடுகிறார். இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த படம் நண்பன். 2012ம் ஆண்டில் வெளியாகி, பெரிய வரவேற்பை பெற்றது.
நண்பன் படம் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் இயக்குனர் ஷங்கர் மற்றும் அந்த படத்தில் விஜயின் நண்பர்களாக நடித்திருந்த ஜீவா எஸ்ஜே சூர்யா ஸ்ரீகாந்த் சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த ரசிகர்களில் ஒருவர், விஜய் அண்ணா, இந்த படம் எப்படி ஹிட் ஆச்சுன்னு எனக்கே தெரியலைன்னு நீங்க நடிச்ச எந்த படத்தை சொல்வீங்க என்று மைக் பிடித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடிகர் விஜய் சற்றும் யோசிக்காமல், எல்லாம் படமும்தான் என்று அதிரடியாக பதில் அளித்தார். இதைக்கேட்டு அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். அதிலும் அங்கு விஜய்க்கு அருகில் அமர்ந்திருந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் கைதட்டி வாய்விட்டு சிரித்து விஜயின் நகைச்சுவை உணர்வை வெகுவாக ரசித்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





