தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னையில் கல்வி விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் விழா இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருதுகளை கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் விழாவில், பங்கேற்று வழங்கி வருகிறார்.
இதே போல் வருகிற 3ம் தேதியும் இந்த விழா, 2ம் கட்டமாக நடத்தப்பட உள்ளது, முதல்கட்டமாக இன்றைய விழாவில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ள நிலையில், விடுபட்ட மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வருகிற 3ம் தேதி, இதே போன்ற ஒரு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று பரிசுகளை, கல்வி விருதுகளை வழங்க இருக்கிறார்.
இன்றைய விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது, வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு விஷயம் பிரண்ட்ஷிப். நட்பு ரொம்ப முக்கியமானது. வாழ்க்கையில் அதை தவிர்க்கவே முடியாது. பெற்றோருக்கு அடுத்தபடியாக நண்பர்கள் இருக்கின்றனர். சில நேரங்களில் பெற்றோரை விட அதிகமான நேரம் பிரண்ட்ஸ்களோடு இருக்கிற சூழ்நிலை ஏற்படும். அதனால் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள்.
அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். நட்பு என்பது தானாக உருவாகிறது. இதில் எப்படி நண்பர்களை தேர்வு செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்பது அது கரெக்டுதான். அதனால் நான் கொஞ்சம் வேற மாதிரி சொல்கிறேன்.
உங்கள் நட்பு வட்டாரத்தில் ஏதேனும் தவறாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கு தவறான பழக்கங்கள் இருந்தால் அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். அப்படி இல்லை என்றாலும், நீங்களும் அந்த தவறான கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டு விடாதீர்கள். எப்போதும் நீங்கள் அதில் ஈடுபடக் கூடாது.
நான் முதலிலேயே சொன்னதுதான். உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தை கொண்டும் இழந்து விடாதீர்கள். இதை ஏன் நான் வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், சமீபத்தில் நம் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு, அதுவும் இளம் வயதினர் மத்தியில் ரொம்பவும் அதிகமாகி விட்டது, என்று பேசியிருக்கிறார் நடிகர் விஜய்.





