சமீபமாக தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக மட்டுமின்றி ஒரு தனித்துவம் மிக்க நடிகராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். அவர் நடிக்கும் படங்கள் மசாலா கதைகளாகவே இருந்தாலும், அந்த படங்களிலும் தனது நடிப்பை மிக பரிபூரணமாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தி அசத்துகிறார் தனுஷ்.
அதனால் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தனுஷ் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில், புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க மறுத்த நிலையில், அந்த வாய்ப்பை அடுத்ததாக பெற இருந்தவர் தனுஷ்தான். ஆனால் ஏற்கனவே அவர் ஒத்துக்கொண்ட படங்கள் காரணமாக, அந்த படத்துக்கு தேதி ஒதுக்க முடியாத சூழலில், அந்த படத்தில் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். இந்த படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா முரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இன்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாள் வசூலும், விமர்சனமும் தனுஷூக்கு சாதகமாக வந்துள்ளது.
படம் பார்த்த அனைவருமே, படம் மிக சிறப்பாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஏஆர் ரகுமான் இசையும், படத்தின் இடைவேளை காட்சியும், பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வழக்கமான பழிவாங்கும் கதை தான் என்றாலும், படத்தின் திரைக்கதை வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தனது அண்ணன் செல்வராகவன் படங்களில் தொடர்ந்து நடித்த தனுஷ், அவர் இயக்கிய ராயன் படத்தை அண்ணன் செல்வராகவன் ஸ்டைலில் தான் இயக்கி இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக இயக்குனர் வெற்றிமாறன் ஸ்டைலில் இந்த படத்தை தனுஷ் இயக்கியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் படத்துக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ராயன் படம் குறித்து தனது எக்ஸ் பதிவில் இயக்குனர் செல்வராகவன் கூறியிருப்பதாவது, ராயன் படத்தை பார்த்துவிட்டேன். அற்புதமாக இருக்கிறது. நடிகராகவும், இயக்குனராகவும் தனுஷ் மிளிர்கிறார். உன்னை நினைத்து பெருமையா இருக்கு தம்பி. அனைத்து நடிகர்களின் பணியையும் ரசித்தேன். ஏஆர் ரகுமான் சார் நம்மை புது உலகுக்கு அழைத்து செல்கிறார். ஒட்டுமொத்த குழுவிற்காக மகிழ்ச்சியடைகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.





