எப்போதுமே ஜாலியான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் வெங்கட் பிரபு. அஜித் குமாரை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்ததன் மூலம் முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் முதலிடத்தை அவர் பிடித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.
சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு, பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. தொடர்ந்து விஜயை வைத்து அவர் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை இயக்கினார். தந்தை மகன் என விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்த அந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
படத்தில் பிரசாந்த் பிரபுதேவா சினேகா என பெரும் கூட்டணி இருந்தாலும் வெகுஜன ரசிகர்களிடம் இந்த திரைப்படம் என்னவோ கலவையான விமர்சனத்தைதான் பெற்றது. குறிப்பாக அழகிய தமிழ் மகன் பாணியிலேயே இந்த திரைப்படம் இருந்ததாகவும், இரண்டாம் பாதியில் கதை அந்த அளவு சுவாரஸ்யமாக செல்லவில்லை என்றும் பலர் கூறினர்.
கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் நன்றாக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இது ஒரு பக்கம் இருந்தாலும், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வசூல் ரீதியாக எந்த ஒரு குறையையும் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகாமலேயே இருக்கிறது.
அவர் சிவகார்த்திகேயனுடன் இணையலாம் என்று பலரும் கூறி வந்த சூழலில், தற்போது அது உறுதியாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு வழக்கம் போல யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வரும் அக்டோபர் மாதம் இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, மதராசி திரைப்படத்தில் நடித்த முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக பராசக்தி திரைப்படத்தின் விடுபட்ட பணிகளிலும் ஈடுபட காத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து குட் நைட் பட இயக்குனர் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. நடுவே, விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி படு பிஸியாக இருக்கும் நடிகர், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெங்கட்பிரபு படத்திற்காக கால் சீட் கொடுப்பாரா என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





