நடிகர் விஜய் ஜனநாயகன் என்ற தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளில் விஜய் முழு தீவிரமாக செயல்பட திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே விஜய் 70வது படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதுதான் அவரது கடைசி படம் என்றும், அந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க உள்ளதாகவும் கடந்த வாரத்தில் ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால் ஜனநாயகன் படம்தான் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பது பிறகு திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜீத்குமார். ஆனால் விஜய் எனக்கு போட்டியாளர் என்று அஜீத்குமாரோ, அஜீத் எனக்கு போட்டியாளர் என்று விஜயோ எப்போதும் சொன்னதில்லை. ஆனால் ரசிகர்களை பொருத்தவரை அஜீத்குமார், விஜய் போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில் விஜய் அரசியலில் ஆர்வமாக இருக்கிறார். நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக இருக்கிறார். இருப்பினும் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டால் அஜீத்குமாருக்கு யாருமே போட்டியில்லை என்ற சூழலே உருவாகும். இது ஏகே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
தற்போது நடிகர் அஜீத்குமாருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்துள்ளது. கலைத்துறையில் அவர் சிறந்து விளங்குவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன், கடந்த 2023ம் ஆண்டில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆகியோர் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளனர்.
நடிகர் விஜய் 3 முறை தமிழக அரசின் திரைப்பட விருதுகள், ஒரு முறை ஐரா விருது, ஒருமுறை காஸ்மோபாலிட்டன் விருது, ஒரு முறை இந்தியா டுடே விருது, ஒருமுறை சைமா விருது, 8 முறை விஜய் விருதுகள், 3 முறை எடிசன் விருதுகள், 2 முறை விகடன் விருதுகள் என பல விருதுகளை பெற்றிருந்தாலும் இதுவரை மத்திய அரசின் ஒரு விருதை கூட பெறாமல் சினிமாவில் இருந்து அவர் விடை பெற போகிறார் என்பதே விஜய் ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை தந்துள்ளது.





