தமிழ் சினிமாவில் சாதாரணமான படங்களில் நடித்து, பிறகு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் நடிகர் விஜய். இப்போதைக்கு தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் யார் என்றால் அது நடிகர் விஜய்தான். ரஜினி, கமல், அஜீத்குமாரை காட்டிலும் விஜய் படங்களுக்கு கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பும், ஆரவார ஆதரவும் மற்ற நடிகர்களுக்கு இல்லை.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கிய விஜய், வருகிற 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் லட்சியத்தோடு கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். வருகிற செப்டம்பர் மாதம் 22ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்த ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்துவதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். நாளை காலை 9.15 மணிக்கு, பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தனது கட்சிக் கொடியை கட்சியின் தலைவர் ஏற்றுகிறார். அதற்காக கட்சியின் மிக முக்கியமான 300 நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு பனையூர் கட்சி அலுவலகத்தில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால், அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும், இயற்கையும் நமக்கு அமைத்து கொடுத்திருக்கும் நாள்தான் 2024, ஆகஸ்ட் 22ம் தேதியாகும்.
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாக மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகதத்தில் அறிமுகப்படுத்தி கழக கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் வெற்றி நிச்சயம் என்று அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீஸ் தரப்பில் பாதுகாப்பு அளிக்கவும் தவெக நிர்வாகிகள் சார்பில் பனையூர் போலீசில் மனு தரப்பட்டுள்ளது. இதில் நிகழ்ச்சிக்கான இடம் விஜய்க்கு சொந்தமானது என்பதால், விஜய் வந்து செல்லும் வழித்தடங்களில் மட்டும் போலீசார் கூடுதல் பாதுகாப்பு தர சம்மதித்துள்ளதாக தெரிகிறது.





