தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரக இருப்பவர் ரவி மோகன். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார். ஜெயம் ரவி என்கிற நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது 2 மகன்களும் மனைவி ஆர்த்தியிடம் வளர்ந்து வருகின்றனர். இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னையில் நடிகர் ரவிமோகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய பர்சனல் இன்டர்வியூ. சினிமா தொடர்புடையது கிடையாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது. சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர்.
இத்தனை நாட்களாக நான் பேசாமல் இருந்தது தவறு. முட்டாள்தனம் செய்து விட்டேன். மற்றவர்கள் போல் எனக்கு 25 பேர் கொண்ட குழு கிடையாது. 23 ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வந்துள்ளேன். என் குடும்பத்தை பற்றி ஏதேனும் குறை கூறினால் நான் சும்மா இருக்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக படம் எடுத்தவன் நான். பெண்கள் பற்றி எனக்கு தெரியாதா?
என் அம்மா அப்படி என்னை வளர்க்கவில்லை. பெண்களுக்கு முன்னுரிமை தந்து படங்கள் எடுத்தவன் நான். இவ்வளவு நாள் நான் அமைதியாக இருந்ததற்கு காரணம் உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான். குழந்தைகள் மீது அன்பில்லை என்று என்னை பார்த்து சொல்கிறார்கள். என் பாசத்தை பற்றி யாரும் பேசாதீங்க. அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று தெரிந்துதான் தெறித்து வெளியே ஓடி வந்தேன்.
14 வருஷம் கஷ்டப்பட்டு அந்த வீட்டில் வாழ்ந்தேன். பாதுகாவலர்களுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். என் பிள்ளைகளை என்னுடன் போனில் பேசவிடாமல் தடுக்கின்றனர். என் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் பீஸ் கட்டி படிக்க வைப்பவன் நான். கெனிஷாவையும் ஊரைவிட்டு அனுப்பி விட்டீங்க. அவர்களை சும்மா விடமாட்டேன்.
எதுவும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே நான் வந்தேன். அவர்கள் நன்றாக கோடிக்கணக்கான சொத்துக்களோடு சுகமாக இருக்கிறார்கள். என்ன கிண்டல் பண்ணினாலும் நான் அமைதியாகவே இருக்கணும். இனி நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. அந்த வீட்டில் என்ன நடந்தது என அந்த தெருவுக்கே தெரியும். அந்த குடும்பம் வேண்டாம் என்று என் பெற்றோர் கெஞ்சினார்கள். நான்தான் கேட்கவில்லை என்று நடிகர் ரவிமோகன் கூறியிருக்கிறார்.





