நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்தும் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு அரசியலுக்கு சென்றிருக்கிறார். தற்போது எச் வினோத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தளபதி 69 படத்துடன் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்ற உறுதியான முடிவெடுத்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி வருகிற நாளை 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விசாலை என்னும் கிராமத்தில் முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துகிறார்.
நடிகர் விஜய் இந்த அரசியல் மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் எதிர்கால திட்டங்கள் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பேச இருக்கிறார். இந்த மாநாட்டில் விஜய் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது பேசுவார் என்று கூறப்படுகிறது. 1.5 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம் நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்க போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கணத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம் நாம் வெற்றிக் கொள்கை திருவிழாவை.
இந்த திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக விசாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்.
வாருங்கள் மாநாட்டில் கூடுவோம் நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதி பூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். வி சாலை என்னும் வியூக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் தனது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.





