நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சதுரங்கவேட்டை தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு ஆகிய வெற்றிப் படங்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்துடன் நடிப்புக்கு விஜய் குட்பை சொல்கிறார். இது அவருடைய 69வது படம் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே பிரியாமணி மமிதா பைஜூ நரேன் பாபி தியோல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
சென்னை மற்றும் பையனூரில் செட் அமைக்கப்பட்டு பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீதம் 10 சதவீத படப்பிடிப்பு மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. இதில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதாக தெரிகிறது. தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீ மேக் இது என்ற தகவலும் உள்ளது.
ஜனநாயகன் படத்தின் கதைப்படி போலீஸ் அதிகாரியான விஜய்க்கு உதவிய சிலரை சந்திக்கும் காட்சிகள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் படமாக்கப்படுகிறது. இதற்காக நேற்று நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையம் முன் திரண்டிருந்த கட்சியினர் தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்திய விஜய், காரில் கொடைக்கானலுக்கு சென்றார்.
கொடைக்கானலில் இன்று துவங்கி வரும் 4 நாட்களுக்கு விஜய் நடித்த காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அதன்பின்பு ஷூட்டிங்கை முடித்த பிறகு வரும் 5ம் தேதி விஜய் சென்னைக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடியில் தான் படப்பிடிப்பு நடக்கிறது. அங்குள்ள விடுதியில் 4 நாட்கள் தங்கி விஜய் படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார்.
ஆனால் ஜனநாயகன் படப்பிடிப்பை இன்று துவங்கிய நிலையில் அங்கு கனமழை பெய்ததால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மணிக்கணக்கில் மழை பெய்ததால் படப்பிடிப்பை இன்று நடத்த முடியவில்லை. உடனடியாக விடுதிக்கு திரும்பிய நடிகர் விஜய் ஓய்வெடுத்தார். எனினும் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் அங்கும் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் நடிகர் விஜயை காண அவர் தங்கியிருந்த விடுதி முன்பும், படப்பிடிப்பு தளத்திலும் திரண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





