நடிகர் விக்ரமிற்க்கு பிரம்மாண்ட வெற்றி கிடைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றே கூறலாம். நடிப்பின் ராட்ஷசனாக விளங்கும் அவர், தனது உடலை வருத்தி, நடிப்பிற்காக பல்வேறு தியாகங்களை செய்து வந்தாலும் அதனை இயக்குனர்கள் சரிவர வெளிக்காட்டுவதே இல்லை. இதனால் விக்ரமிற்கு சமீப காலமாக சொல்லிக் கொள்ளும் படியாக எந்த வெற்றியும் அமையவில்லை.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் தனது நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். அந்தத் திரைப்படமும் கோடி கணக்கில் வசூல் ஈட்டியது. இதில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தால் அது விக்ரமிற்கான படம் என்று கூற முடியாது.
இருப்பினும் அவர் மலை போல் நம்பி இருந்தது தங்கலான் திரைப்படத்தை தான். பா ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த திரைப்படம் வரவேற்பு பெறவில்லை. இதற்குக் காரணம் திரைக்கதையில் ஏற்பட்ட பயங்கரமான தொய்வு தான்.
குறிப்பாக இரண்டாம் பாதி சரிவர இல்லாததால் தங்கலான் திரைப்படம் வந்த வேகத்தில் திரும்பியது. இப்படியான சூழலில் தான் விக்ரம் அடுத்ததாக, அருண்குமாருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இதற்கு முன்பு பண்ணையாரும் பத்மினியும் சேதுபதி சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை எடுத்தவர் அருண்குமார்.
அண்மையில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் இவர்கள் இணையும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு வீர தீர சூரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் நேரடியாக அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் அருண்குமார். எஸ் ஜே சூர்யா துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், வரும் ஜனவரி மாதம் வெளியாகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மடோனா அஸ்வினுடன் சேர்ந்திருக்கிறார் விக்ரம். ஏற்கனவே இவர் மண்டேலா திரைப்படத்தை எடுத்து தேசிய விருதை பெற்றார். இதேபோல் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தையும் அவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் அஸ்வின் கூறிய கதை விக்ரமிற்கு பிடித்துப் போனதால் இருவரும் விரைவில் படப்பிடிப்பு தளத்திற்கு பயணிக்க இருக்கிறார்கள்.





