நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் மலையாள நடிகர் விநாயகன். சிலை கடத்தல் மன்னன் விருமன் கேரக்டரில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஜெயிலர் படம் மறக்க முடியாத ஒரு படைப்பாக இருந்ததற்கு விநாயகனின் அட்ராசிட்டியான நடிப்பும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
குறிப்பாக சில காட்சிகளில் அவர் ரஜினிகாந்தை மிரட்டுவதும் பிறகு சில காட்சிகளில் ரஜினிக்கு பணிந்து போவதும் தன்னுடைய அடியாட்களுடன் ஜாலியாக நடனமாடுவதும் என பல காட்சிகளில் ஜெயிலர் படத்தில் ஸ்கோர் செய்தவர் விநாகயன். இவர் ஏற்கனவே திமிரு சிலம்பாட்டம் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் விநாயகன், சமீபத்தில் மம்முட்டியுடன் களம்காவல் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரே வரவேற்பை பெற்றது. குடிப்பழக்கம் உள்ள நடிகர் விநாயகன் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் சிக்கிக்கொள்வதும் போலீசார் அவரை கைது செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில் நடிகர் விநாயகன் தோள் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்த நிலையில் தற்போது விநாயகன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதற்கு சிலர் விநாயகனின் முந்தைய செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் விதமாக இதற்கெல்லாம் அவர் செய்த கர்மா தான் காரணம் என்று பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து நடிகர் விநாயகன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தயவுசெய்து கர்மா பற்றி யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். என்னுடைய சாவை நேரம்தான் தீர்மானிக்கும்.
நான் ஒன்றும் என்னுடைய கெட்ட செயல்களுக்காக இந்த விபத்தில் காயமடையவில்லை. என்னுடைய வேலை நேரத்தில் தங்களை மிகுந்த அறிவாளிகள் போல் காட்டிக்கொண்ட சிலரை நம்பியதால் தான் இது நடந்தது. என்னுடன் உறுதுணையாக நிற்பவர்கள் இன்னும் என்னுடன்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை கூடி இருக்கிறதே தவிர குறையவில்லை என்று நடிகர் விநாயகன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





