தமிழ் சினிமாவில் மிக நல்ல இயக்குனராக அடையாளம் காணப்பட்டவர் கரு பழனியப்பன். கடந்த 2003ம் ஆண்டில் அவர் இயக்கிய முதல் படம் பார்த்திபன் கனவு. ஸ்ரீகாந்த் சினேகா நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குனர் விருதும் கரு பழனியப்பனுக்கு கிடைத்தது.
தொடர்ந்து விஷால் நடித்த சிவப்பதிகாரம் இயக்குனர் சேரன் சினேகா நடித்த பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்களை இயக்கினார். அடுத்து இயக்குனர் கரு பழனியப்பனே நாயகனாக நடித்த மந்திரப்புன்னகை படம், தொடர்ந்து சதுரங்கம் மற்றும் ஜன்னல் ஓரம் போன்ற திரைப்படங்களை அவர் இயக்கினார்.
கடந்த 2013ம் ஆண்டில் பார்த்திபன் விதார்த் விமல் நடித்த ஜன்னல் ஓரம் படம் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு 13 ஆண்டுகளாக கரு பழனியப்பன் படங்கள் எதுவும் இயக்கவில்லை. சில டிவி சேனல்களில் விவாத நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த அவர் அரசியல் இலக்கியம் சார்ந்த மேடைகளில் பங்கேற்று பேசி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் இயக்குனராக தமிழ் சினிமா களத்தில் ரீ என்ட்ரி தருகிறார். மிக விரைவில் ஒரு படத்தை இயக்க அவர் தயாராகி விட்டார். இந்த படத்தின் கதாநாயகன் அதாவது கதையின் நாயகன் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் காளி வெங்கட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் காளி வெங்கட். அதே நேரத்தில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கொடி அநீதி கார்கி போன்ற பல படங்களில் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியிருந்தனர்.
கதையின் நாயகனாக காமெடி நடிகர் காளி வெங்கட் நடிப்பதால் இது காமெடி படம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமான ஒரு கதையம்சத்தில் இந்த படம் உருவாகிறது. வழக்கமாகவே கரு பழனியப்பன் படம் என்றால் ஆழமான கருத்துகளும் அழுத்தமான காட்சியமைப்புகளும் படத்தில் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கரு பழனியப்பன் இயக்கும் இந்த படம் அதிக கவனம் பெறும் என்றும் கூறப்படுகிறது.





