தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடந்தது. இந்த தேர்தலில் நடிகர் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் தற்போதைய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் பங்கேற்று தனது ஓட்டை பதிவு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசிய நடிகர் விஷால் கூறியதாவது, நான் போட்டியிடாததற்கு காரணமே அப்போது பெரியவர்கள் யாரும் போட்டியிடவில்லை என்று சொன்னதால் தான். இந்த முறை பெரியவர்கள் சினிமா தெரிந்தவர்கள் அறிவாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
மேலும் எங்கள் வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடத்தின் பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டன. இன்னும் ஒன்றரை மாதத்தில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு விடும். அந்த பணிகளில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன் என்று நடிகர் விஷால் கூறினார்.
தொடர்ந்து ஜனநாயகன் படம் சென்சார் விவகாரம் குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால், பிரச்சனை என்று வரும்போது ஒருவர் மட்டும் குரல் கொடுப்பதால் எந்த பலனும் இல்லை. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 1519 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் எப்படி இருக்கும்?
எனவே தேர்தலில் ஜெயிப்பவர்கள் தோற்பவர்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஜனநாயகன் திரைப்பட விவகாரம் கோர்ட் விசாரணையில் இருக்கும்போது தயாரிப்பாளர் சங்கம் அதில் தலையிட முடியாது. கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது நாம் இதில் என்ன செய்ய முடியும்?
மேலும் சென்சார் வாரியத்தில் 4 அல்லது 5 பேர் உட்கார்ந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்காக எடுக்கப்படும் படத்தில் எதை வைக்க வேண்டும்? எதை நீக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். சத்தியமாக சொன்னால் அதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அதுதான் விதிமுறை என்பதால் அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார். அவரது துணிச்சலான இந்த கருத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





