தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து அவர் நடித்த குள்ளநரிக் கூட்டம் ராட்சசன் முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை கட்டாகுஸ்தி உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.
கட்டாகுஸ்தி படம் பெரிய வெற்றிய பெற்ற நிலையில் இப்போது கட்டாகுஸ்தி 2 படம் வருகிற ஜூலை 3ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் குறித்து படத்தின் நாயகன் நடிகர் விஷ்ணு விஷால் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, நான் நடித்த பல படங்களில் பாகம் இரண்டில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.
சில படங்கள் எனக்கு செட் ஆகவில்லை. குறிப்பாக என் முதல் படமான வெண்ணிலா கபடி குழு படத்தில் பார்ட் 2ல் நடிக்க கேட்டார்கள். நான் முதல் பாகத்தில் இறந்து விடுவேன். பாகம் 2ல் கதையை என் கேரக்டருக்காக மாற்றி எடுத்தால் செட் ஆகாது என்று சொல்லிவிட்டேன். நீர்ப்பறவை படத்தில் கிளைமாக்ஸிலும் நான் இறந்து விடுவேன். அதனால் அதிலும் நான் 2ம் பாகத்தில் நடிக்கவில்லை.
இப்போது கட்டாகுஸ்தி 2 பாகத்தில் நடித்திருக்கிறேன். ஒரு ஸ்போர்ட்ஸ் படம் 2ம் பாகமாக வருவது இதுதான். இந்த படத்தின் கடைசியில் பாகம் 3க்கான லீடு வைக்கவில்லை. ஆனாலும் கட்டாகுஸ்தி படம் 3ம் பாகமாக எடுக்க அதிக வாய்ப்புண்டு. என்னுடைய படங்கள் நான் தயாரிக்கும் படங்கள் ஓடிடியில் ஈஸியாக விற்றுவிடுகிறது என்று சொல்கிறார்கள்.
அதற்கு முக்கியமான காரணம் நான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் தான். மற்ற பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் கருவும் கதையும் புதிதாக இல்லாவிட்டால் ஓடிடியில் வாங்க மாட்டார்கள். கட்டாகுஸ்தி படத்தின் வெற்றிக்கு இயக்குனர் செல்லா அய்யாவுதான் காரணம். அவருக்கு கார் உள்ளிட்ட பரிசுகளை அளிப்பேன்.
விரைவில் என்னுடைய 25வது படத்தில் நான் நடிக்க உள்ளேன். என் மனைவி ஜூவாலா கட்டா என்னுடைய படங்களை தியேட்டரில் தான் பார்ப்பார். முன்பே கதை சொல்ல வேண்டாம், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவங்கள் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவரும் விளையாட்டு வீரர் என்பதால் நானும் அடிப்படையில் விளையாட்டு வீரர் என்பதால் எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான கதைகள் பிடித்திருக்கிறது என்று நடிகர் விஷ்ணு விஷால் அதில் கூறியிருக்கிறார்.





