தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். முதல் படமே அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அவர் இயக்கிய ராம் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2 படங்களிலேயே ஒரு சிறந்த படைப்பாளி என்று ரசிகர்களுக்கு அமீர் நிரூபித்து காட்டியிருந்தார்.
இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான படம் பருத்தி வீரன். இந்த படம் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் அடையாளம் சொல்லப்படும் ஒரு முக்கிய படைப்பாக இருக்கிறது. நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
பருத்திவீரன் படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கிய அமீர், இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். மேலும் இந்த படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த நடிகை பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக வலம் வரும் அமீர், அவ்வப்போது சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் தனது பதிவுகளை செய்து வருகிறார். தனது அரசியல் பார்வை குறித்தும் வெளிப்படையாக பொதுவெளியில் பேசி வருகிறார். அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இன்றைய தேர்தல் என்பது அரசியல் வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளியான தேர்தல். சத்தியபாமாவும் மரகதமும் வென்றால் மக்கள் தோற்றுவிட்டார்கள் என்று அர்த்தம்.
அவர்கள் இருவரும் தோற்றுவிட்டால் மக்கள் வென்று விட்டார்கள் என்று அர்த்தம் என்று அந்த பதிவில் இயக்குனர் அமீர் ஆவேசமாக கூறி இருக்கிறார். அதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த 2 வேட்பாளர்களும் அதிமுக சார்பில் போட்டியின்று வென்ற நிலையில் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு தவெக பக்கம் சென்றவர்கள். அவர்களே தற்போது மீண்டும் இந்த இடைத்தேர்தலில் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





