- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே இரவு... இந்த பக்கம் மணிகண்டன்... அந்த பக்கம் அதர்வா... கிடாரி பட இயக்குனரின் தரமான...

ஒரே இரவு… இந்த பக்கம் மணிகண்டன்… அந்த பக்கம் அதர்வா… கிடாரி பட இயக்குனரின் தரமான செய்கை…

- Advertisement -

தனியார் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவைக்கான ரியாலிட்டி ஷோ மூலம் தனது திறமையை வெளிகாட்டியவர் மணிகண்டன். ஆரம்பத்தில் வானொலி தொகுப்பாளராக இருந்த அவர், தனது டப்பிங் குரல்வளத்தினால் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சில குறும்படங்களிலும் நடித்து வந்தார். அரிதாக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மிக சரியாக பயன்படுத்திக் கொண்ட மணிகண்டன், பீட்சா படத்தின் இரண்டாம் பாகத்தில் வசனகர்த்தாவாகும் வாய்ப்பை பெற்றார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும், தனது கடின முயற்சியை விடாத மணிகண்டன், விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த சமயத்தில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தில்தான், மணிகண்டனை முதல் முதலாக பலரும் கவனித்தனர். விவரம் தெரியாத முரளி என்னும் அப்பாவி இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்த அவர், படத்தின் பெரும்பாலான காட்சிகளில் விஜய் சேதுபதியுடன் வந்து போவார். அவருடன் ஏற்பட்ட பழக்கம்தான், மணிகண்டனுக்கு விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்க, விக்ரம் வேதாவின் வசனங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.

மேலும் விக்ரம் வேதாவில் அப்பாவி போலீஸ் காரராக நடித்திருந்த மணிகண்டன், கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நெகடிவ் ஷேடை காட்டி ட்விஸ்ட் கொடுத்திருப்பார். இதை தொடர்ந்து காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார் மணிகண்டன். லெனின் எனும் கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், படம் முழுக்க புரட்சி போராட்டம் செய்யும் துடிப்பான இளைஞராக கச்சிதமாக பொருந்தியிருந்தார். அவருக்கும், ரஜினிக்குமான காட்சிகள் திரையரங்கை கலகலப்பூட்டின.

இதற்கிடையே மீண்டும் தனது எழுத்தில் கவனம் செலுத்திய மணிகண்டன், அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் எடுக்கப்பட்ட விஸ்வாசம் படத்தில் வசனகர்த்தாவாக செயல்பட்டு கலக்கினார். தொடர்ந்து ஹலிதா சமீம் இயக்கிய சில்லு கருப்பட்டி திரைப்படத்தில் பலரையும் கவர்ந்தார் மணிகண்டன்.

இந்த சூழலில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. ராசாகண்ணு எனும் கதாபாத்திரத்தில் இருளர் சமூக இளைஞராக தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்தார் மணிகண்டன். இதனைத் தொடர்ந்து, குட் நைட் திரைப்படம் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார் மணிகண்டன். சமீபத்தில் வெளியான இந்த படம், மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. மோட்டார் மோகனாக பக்கத்து வீட்டு இளைஞரை போன்று இயல்பாக நடித்து பாராட்டை பெற்றார் மணிகண்டன்.

இந்நிலையில் தற்போது கிடாரி பட இயக்குனர் பிரசாந்த் முருகேசன் உடன் மணிகண்டன் பணியாற்றியுள்ளார். அதர்வாவும் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மத்தகம் என பெயரிடப்பட்டுள்ளது. ஒரே இரவில் நடக்கும் கதையாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதர்வா போலீஸ்காரர் ஆகவும், மணிகண்டன் கேங்ஸ்டர் வில்லனாகவும் நடித்திருக்கிறார். நிகிலா விமல், திவ்யதர்ஷினி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

சற்று முன்