- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னணி நடிகர்களுக்கு கடிவாளம் போடுகிறதா தயாரிப்பாளர் சங்கம்? வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் புதிய...

முன்னணி நடிகர்களுக்கு கடிவாளம் போடுகிறதா தயாரிப்பாளர் சங்கம்? வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் புதிய படங்கள் படப்பிடிப்பு இல்லை, நவம்பர் 1 முதல் மொத்த படப்பிடிப்பும் நிறுத்தம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்றவர்களின் சம்பளம் ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை உயர்ந்துள்ளது. இரண்டாம் நிலை நடிகர்களான சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, சிலம்பரசன் போன்றவர்களின் சம்பளமும் கிட்டத்தட்ட ரூ. 50 கோடியை நெருங்கி விட்டன. இதில் விஜய் சேதுபதி மட்டுமே மகாராஜா பட வெற்றிக்கு பிறகு, ரூ. 15 கோடியாக இருந்த தனது சம்பளத்தை ரூ. 10 கோடியாக குறைத்துள்ளார்.

எனினும் டாப் ஸ்டார் நடிகர்களின் படங்கள், 500 கோடி, 600 கோடி ரூபாய் என அதிக வசூலை குவிப்பதால் இந்த சம்பளத்தை தாராளமாக கொடுக்க முன்வரும் சில தயாரிப்பாளர்கள், நடிகர்களின் கால்ஷீட் கிடைத்தாலே போதும் என்ற நிலையில் உள்ளனர். அதே போல் சில முன்னணி இயக்குனர்களின், இசையமைப்பாளர்களின் சம்பளமும் ரூ. 50 கோடி வரை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தும் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்களால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மிகப்பெரிய தோல்வி படங்களை இந்த நடிகர்கள், இயக்குனர்கள் தரும்போது படத்தின் தயாரிப்பாளர் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கிறார். இப்படி பல தமிழ் பட தயாரிப்பாளர்கள் நொடிந்து போன நிலையில், இப்போது தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, அவர்களது தயாரிப்பில் படங்களில் நடிக்கின்றனர் டாப் ஸ்டார் நடிகர்கள்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றி, சினிமா நடிகர்களுக்கு கடிவாளம் போட முன்வந்திருக்கிறது. அதன்படி தீர்மானங்களாவன; முன்னணி நடிகர்களின் படங்கள் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும். ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியிருந்தால் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அந்த படத்தை முடித்துக்கொடுத்த பிறகே மற்ற புதிய படங்களில் நடிக்க செல்ல வேண்டும்.

இன்றைய தேதியில் தயாரித்து முடிக்கப்பட்ட பல படங்கள் தியேட்டர் கிடைக்காமல் அப்படியே தேங்கி கிடக்கிறது. இதை மாற்ற புதிய விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. அதனால் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி முதல் புதிய படங்கள் படப்பிடிப்பு துவங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது படப்பிடிப்பில் உள்ள படங்கள் குறித்த விவரங்களை, சங்கத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

இப்போது நடந்து வருகிற படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதை மறு சீரமைப்பு செய்ய வேண்டியிருப்பதால் வரும் நவம்பர் 1ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுகிறது. படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் நவம்பர் 1 முதல் நடக்காது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சற்று முன்