தமிழ் சினிமா துறையில் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்
போன்ற உச்ச நடிகர்களும் இருக்கின்றனர். தினமும் 2000 ரூபாய் சம்பளம் வாங்கும் துணை நடிகர்களும் இருக்கின்றனர். அவரும் ரசிகர்களுக்கு பரிச்சயமான, தனது காட்சிகளில் ரசிக்க வைக்கிற, சிரிக்கிற வைக்கிற ஒரு கலைஞராக இருந்தால் இமேஜ் அடிப்படையில் அந்த நடிகர் முதல் படிக்கட்டுக்கு கீழே இருக்கிறார். வளர்ந்த நடிகர் உச்சாணியில் நிற்கிறார்.
எம்ஜிஆர் சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களே ஆரம்பத்தில் சில நூறுகளில் சம்பளம் வாங்கியவர்கள்தான். ஏனெனில் சிவாஜி முதலில் நாடகங்களில் நடித்தவர். எம்ஜிஆரும் நாடகங்களில் நடித்து பின் சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்துதான் ஹீரோ அந்தஸ்துக்கு வந்தவர்.
இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று முடிச்சு படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளம் ரூ. 2 ஆயிரம் மட்டுமே. ஸ்ரீதேவிக்கு 5 ஆயிரம், கமலுக்கு 30 ஆயிரம் சம்பளம் தரப்பட்டுள்ளது. 16 வயதினிலே படத்தில் நடித்த ரஜினிக்கு, பேசின சம்பளத்தை இன்னும் முழுமையாக தராமல் இருக்கிறார் பாரதிராஜா.
ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் நடித்து ஓரிரு படங்களில் முகம் காட்டிவிட்டாலே, அது ஹிட் படங்களாக மாறிவிட்டாலே சம்பளம் என்பது தாறுமாறுதான். கவுண்டமணி, உச்சத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாங்கியிருக்கிறார். அதே போல் வடிவேலு ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார். யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் ரூ. 11 லட்சமாம்.
இப்படி அவர்கள் வாங்குவதை கணக்கிட்டால் மாத சம்பளம் ரூ. 3 கோடியை கடந்து விடுகிறது. மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கவே மூச்சுத்திணறுகிற காலகட்டத்தில் இப்படி கோடி கோடியாக சம்பாதிக்கும் இவர்களுக்கு இருப்பது, மக்கள் மத்தியில் பிரபலம் என்ற ஒரு அடையாளம் மட்டுமே. இவர்கள் ஒன்றும் இன்னொரு சிவாஜியாக, இன்னொரு கமலாக நடிப்பில் பெரிய புலிகள் இல்லை.
இந்நிலையில் டாடா, லிப்ட் என்ற 2 படங்களில் நடித்த கவின் ரூ. 7 கோடி, விடுதலை 1 படத்தில் ஹீரோவாக நடித்த சூரி ரூ. 8 கோடி, கோமாளி படம் இயக்குனர், லவ்டுடே படத்தில் நடித்த கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் ரூ. 10 கோடி என சம்பளம் வாங்குகின்றனர். ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து ஹிட் கொடுத்துவிட்டு இப்படி நான்கு, ஐந்து மடங்கு சம்பளம் அதிகமாக கேட்டு வாங்குவது எந்த விதத்தில் நியாயம் என தயாரிப்பாளர்கள் மிரண்டு போய் பின்வாங்குகின்றனர்.





