மிஷ்கின் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனராக வலம் வந்தாலும் சமீப காலமாக பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அவர் இயக்கிய “நந்தலாலா”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களான “சவரக்கத்தி”, “சூப்பர் டீலக்ஸ்”, “சுட்டுப்பிடிக்க உத்தரவு”, “பேச்சுலர்” ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் “மாவீரன்”, விஜய்யின் “லியோ” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மிஷ்கின். இத்திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். குறிப்பாக “லியோ” திரைப்படத்தில் ஒரு சிறிய கேங்கஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே ஒரு விழாவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மிஷ்கின், “லியோ” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை குறித்த ரகசியம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது கிளைமேக்ஸ் காட்சியில் மிஷ்கினுக்கும் விஜய்க்கும் இடையே ஒரு சண்டைக் காட்சி இருக்கிறதாம். அந்த சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது மிஷ்கினின் மேல் உள்ள மரியாதையால், “அண்ணனை அடிக்க மாட்டேன்” என்று விஜய் கூறினாராம்.

லோகேஷ் கனகராஜ் அந்த சண்டை காட்சியை வேறு மாதிரி வடிவமைக்கலாம் என கூறினாராம். ஆனால் மிஷ்கினோ, விஜய்யிடம் “அதெல்லாம் ஒன்றுமில்லை, அடிங்க” என்று கூறினாராம். அப்படியும் விஜய்க்கு தயக்கமாகவே இருந்ததாம். அதன் பின் ஒருவழியாக விஜய்யை சம்மதிக்க வைத்து அந்த சண்டைக் காட்சியை படமாக்கினார்களாம். இவ்வாறு “லியோ” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் டிவிஸ்ட்டை உடைத்துள்ளார் மிஷ்கின். இதனால் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

மிஷ்கின், இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். வின்சென்ட் செல்வா, “யூத்” திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோதே விஜய்க்கும் மிஷ்கினுக்கும் நல்ல உறவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





