பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இந்தி படவுலகில் சீனியர் நட்சத்திர நடிகராக உள்ள அமிதாப் பச்சனின் மருமகள் என்ற பெருமைக்கு உரியர். அவரது மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
கடந்த 1994ம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றவர் ஐஸ்வர்யா ராய். ஆனால் 31 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரை உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றுதான் ரசிகர்கள் அழைக்கின்றனர். அந்தளவுக்கு அந்த பட்டத்துக்கு முழு உரிமையாளராக ரசிகர்கள் மத்தியில் ஐஸ்வர்யா ராய் மாறிப் போயிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
தமிழில் இருவர் என்ற படம் மூலம் ஐஸ்வர்யா ராய் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஜீன்ஸ் எந்திரன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராவணன் பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் இருவர் படத்தில் மோகன்லால், ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த், ராவணன் படத்தில் பிருத்விராஜ் எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ரெட் ஸீ திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 1994ம் ஆண்டு நான் அழகி போட்டியில் தற்செயலாக தான் பங்கேற்றேன். அதை வெறும் அழகி போட்டியாக மட்டும் நான் கருதவில்லை. சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவம் படுத்தும் வாய்ப்பாகவும் கருதினேன்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அதே ஆண்டு பாலிவுட்டில் இருந்தும் வாய்ப்புகள் வந்தன. தேவதாஸ் படம் என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் போன்றது. அந்த படத்திற்கு பிறகு கதைகளை தேர்ந்தெடுப்பதில் எனக்கு முழுமையான தெளிவு கிடைத்தது என்று அந்த விழாவில் நடிகையை ஐஸ்வர்யா ராய் பேசியிருக்கிறார்.
தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதில் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் 2ம் பாகம் போதிய ஆதரவை பெறவில்லை. இதில் குந்தவை கேரக்டரில் நடித்த திரிஷாவின் அழகும் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றது.





