கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி சனிக்கிழமை இரவு கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டு இருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழக அரசு தரப்பில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் அளிப்பதாக நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
மேலும் தவெக கட்சி சார்பில் நடிகர் விஜய் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் அளிப்பதாக நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையான அம்பிகா நேற்று கரூருக்கு நேரில் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது கரூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா கூறியதாவது, கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவே கரூருக்கு வந்தேன். யாரையும் எந்த கட்சியையும் குறை கொள்வதற்காக நான் வரவில்லை. இந்த சம்பவும் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது.
அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளுக்கு தூக்கிக் கொண்டு பெண்கள் செல்லக்கூடாது என்று அரசும் கட்சியினரும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால் அதையும் மீறி குழந்தைகளை தூக்கிக்கொண்டு கூட்டங்களுக்குச் செல்கின்றனர். பெண்கள் குழந்தைகள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக் கூடாது. நான் கரூர் வந்தது குறித்து என் மீது எந்த சாயமும் பூச வேண்டாம். நான் எந்த கட்சியையும் சார்ந்து வரவில்லை என்று நடிகை அம்பிகா அப்போது கூறியிருக்கிறார்.
கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. ரஜினி கமல் சத்யராஜ் பிரபு கார்த்திக் என அன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர். இவரது தங்கை ராதாவும் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். இப்போது அம்பிகா டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





