தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். இப்போதும் அம்மா அத்தை கேரக்டர்களில் அம்பிகா சினிமாவில் நடித்து வருகிறார். டிவி சீரியல்களிலும் நடிக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் கலந்துக்கொள்கிறார்.
நடிகை அம்பிகாவின் சொந்த தங்கை தான் நடிகை ராதா. இவரும் கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆனால் ராதா ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகி விட்டார். டிவியில் ரியாலிடி ஷோக்களில் மட்டும் அவ்வப்போது நடுவராக பங்கேற்று வருகிறார்.
நடிகை ராதா அம்பிகாவுக்கு சொந்தமாக ஏஆர்எஸ் ஸ்டுடியோ என்ற படப்பிடிப்பு தளம் சென்னையில் உள்ளது. நடிகை அம்பிகா சமீபத்தில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தை முதல் நாள் முதல் காட்சியன்று பார்த்தார். அப்போது படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் படம் பார்த்தனர்.
கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிறகு, நடிகை அம்பிகா அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது, கேப்டன் பிரபாகரன் படம் பல ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் மீண்டும் ரிலீசானாலும் ரசிகர்கள் அதை முதல்முறையாக பார்ப்பது போல் அளிக்கும் ஆதரவைப் பார்த்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய படங்களில் பலவகையான கிராபிக்ஸ் சிஜி ஆகிய தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால் கேப்டன் பிரபாகரன் படத்தில் எந்த கிராபிக்ஸூம் இல்லை. இதில் நடித்த நடிகர்கள், குதிரைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கையாக நேரடியாகவே படமாக்கப்பட்டவை என்பதை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இந்த படத்திற்கு முதல் முறை எந்த வசனத்திற்கெல்லாம் கைதட்டல் கிடைத்ததோ அதேபோல இப்போது ரீ ரிலீஸ் ஆகி இருக்கும்போதும் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
இது பார்ப்பதற்கே வியப்பாக இருக்கிறது. புஷ்பா மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களை ஒப்பிட வேண்டும் என்றால் புஷ்பா படம்தான் கேப்டன் பிரபாகரன் படம் மாதிரி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கேப்டன் பிரபாகரன் தான் முதலில் வந்த படம். கேப்டன் பிரபாகரன் எந்த ஒரு படத்தையும் பார்த்து எடுக்கப்பட்டது அல்ல. இந்த ஒப்பீடு எல்லாம் தேவையில்லை என்று நடிகை அம்பிகா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





