இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் ஆனந்தி. மேலும் மேகாமன் பறந்து செல்ல வா உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். மேலும் ஜனநாயகன் படத்தில் அவர் சில காட்சிகளில் நடித்த நிலையில் அந்த காட்சிகள் படத்தில் வரவில்லை, எடிட்டிங்கில் நீக்கி விட்டனர் என்று அவரே அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
சினிமாவில் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் ஆனந்தி நடித்திருக்கிறார். இதற்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் சீசன் 10ல் அவரும் போட்டியாளராக பங்கேற்றார். வீட்டுக்குள் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் சண்டை என்று அவரும் போட்டியில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆனந்தி உடனடியாக வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே எவிக்ஷன் பட்டியலில் குறைந்த ஓட்டுகளை பெற்றிருந்த நிலையில் அவரை நிகழ்ச்சி துவங்கிய உடனேயே தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி, அவரை வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுமாறு கூறிவிட்டார்.
வழக்கமாக இதுபோல் போட்டியாளர் வெளியேறும்போது விஜய் சேதுபதி மேடைக்கு அழைத்து அவரிடம் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த அனுபவம் குறித்து கேட்டுவிட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் இருந்த நாட்கள் ஒரு தொகுப்பாக டிவி திரையில் காட்டப்படும். அதன்பிறகு வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்ளிடம் அவர் பேசிவிட்டு வெளியேறுவதுதான் வழக்கமாக உள்ளது.
ஆனால் நேற்று ஆனந்தியை, பிக்பாஸ் வீட்டில் இருந்து அப்படியே வெளியேறி செல்லுமாறு விஜய் சேதுபதி கூறியது அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ஆனந்தியின் அப்பா தவறி விட்டார். அதனால் தான் அவரை உடனடியாக வெளியேறச் சொல்லி விட்டோம். அவரது மறைவுக்கு பிக்பாஸ் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
நடிகை ஆனந்தியின் அப்பா சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர் ( பிடி மாஸ்டர்) ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனினும் அவர் தொடர்ந்து விளையாட்டுத்துறை சார்ந்து நடுவராக செல்வது என்று பிஸியாக இருந்துள்ளார். அவர் கோவையில் வசித்த நிலையில் மறைந்துள்ளார். அதனால் தான் ஆனந்தி உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





