தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான படங்கள் வெற்றி பெறும். காதல் சார்ந்த ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் அடுத்து தொடர்ந்து காதல் சார்ந்த படங்களாக வரும். ஒரு ஆக்சன் படம் வெளியானால், தொடர்ந்து ஆக்சன் படங்களாக வந்துக்கொண்டே இருக்கும்.
அதற்கு சிறந்த உதாரணமாக விக்ரம் படத்தை தொடர்ந்து வந்த பல படங்களை வரிசையாக சொல்லலாம். ஜெயிலர், லியோ, பைட் கிளப், கேப்டன் மில்லர் போன்ற படங்களை சொல்லலாம். இனி வரப்போகும் லால் சலாம், கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், விடாமுயற்சி படங்களிலும் இதே விதமான ஆக்சனை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
அதே போல் கரகாட்டக்காரன் போன்ற கிராமிய படங்கள் வந்து வெற்றி பெற்றால், அது சார்ந்த கதையம்சம் கொண்ட கதைகளாக அதிகமான படங்கள் வெளியாகும். அந்த படத்தில் க்ளைமேக்ஸில், வேப்பிலை எடுத்து மஞ்சள் ஆடையில், ஹீரோ ஹீரோயின் ஆடியதால் தொடர்ந்து வந்த படங்களில் எல்லாம் அதே போன்ற ஒரு கிளைமேக்ஸ் பாடல் காட்சி தவறாமல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு காலகட்டத்தில் பக்தி படமாக வெளிவந்த படம்தான் ஆடிவெள்ளி. நடிகை சீதாவுக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படம் இது. ராமநாராயணன் இயக்கிய இந்த படத்தில் சீதா, நிழல்கள் ரவி, ஒய் விஜயா, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் யானை, பாம்பு போன்றவை நடித்திருந்தது,. இந்த படத்தில் கிளைமேக்ஸ்சில் வண்ண விழியழகி வாசக் குழலழகி என்ற பக்தி பாடலுக்கு, கிராமங்களில் எல்லாம் தியேட்ட்களில் பெண்கள் சாமியாடி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இப்போது இந்த படத்தை ரீமேக் செய்ய, ராமநாராயணனின் மகன் முரளி ராமநாராயணன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆடிவெள்ளி படத்தை அப்படியே ரீமேக் செய்து நடிகர், நடிகைகளை மாற்றி, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, ரசிகர்கள் விரும்பும் விதமாக இந்த படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தை முரளி ராமநாராயணன் தயாரிக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் கதாநாயகி யார் என முடிவு செய்துவிட்டனர். அது, மூக்குத்தி அம்மனாக ஏற்கனவே நடித்து அசத்திய நயன்தாரா தான். அன்னபூரணி நாயகியாக தோற்றுப் போன அவரையா, ஆடிவெள்ளி நாயகியாக்க போகிறார்கள் என பலரும் ஆச்சரியப்படுகின்றனர். ஒருவேளை, நயன்தாராவை வெச்சு காமெடி கீமெடி பண்றாங்களோ எனவும் நெட்டிசன்கள் தரப்பில் கலாய்க்க துவங்கி விட்டனர்.





