தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக் நடிகைகள் என பெயர் பெற்ற நடிகைகள் வெகு சிலரே. அதிலும் 1990களில் குடும்பப் பாங்கான கேரக்டர் என்றால் முதலில் தயாரிப்பாளர், இயக்குனர் உடனே கமிட் செய்ய நினைப்பது நடிகை தேவயானியை தான். தமிழ் மலையாளம் தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தேவயானி.
குறிப்பாக சூரிய வம்சம் கும்மிப்பாட்டு நிலவே முகம் காட்டு நினைத்தேன் வந்தாய் தொடரும் காதல் கோட்டை நீ வருவாய் என உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தம்பி நகுல் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி கோலங்கள் உள்ளிட்ட சில டிவி சீரியல்களிலும் நடித்த தேவயானி, சென்னையில் உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகிறார். சத்தியமங்கலம் அடுத்துள்ள அத்தாணி பகுதியில் சொந்தமாக பல ஏக்கர் விவசாய பூமியில் தன் கணவர் ராஜகுமாரனுடன் இணைந்து விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை தேவயானி முதன்முறையாக கைக்குட்டை ராணி என்ற குறும்படத்தை அவரே எழுதி டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். நிஹாரிகா விகே மற்றும் நவீன் ஆகியோர் இந்த குறும்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தை பி லெனின் எடிட் செய்துள்ளார்.
இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை பேசும் படமாக இருக்கிறது. தாயை இழந்த நிலையில்,தந்தை வெளியூரில் பணிபுரியும் நிலையில் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சி பூர்வமாக இந்த படம் சொல்கிறது. சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
இதுகுறித்து அந்த குறும்படத்தின் இயக்குனர், நடிகை தேவயானி கூறியதாவது, எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் முதல் முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதில் பங்காற்றிய மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஜெய்ப்பூர் திரைப்பட விழாவை போல மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இந்த குறும்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார். சர்வதேச விருது பெற்ற தேவயானியை ரசிகர்கள் பாராட்டி விரைவில் சினிமா இயக்குனராக வாழ்த்தியுள்ளனர்.





