ஜெயிலர் படத்தின் வெற்றியால் படு உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், படம் வெளியான சில நாட்களில் ஜெயிலரை விட மிகப்பெரிய வெற்றியை தான் எப்படி கொடுக்கப் போகிறேன் என்று சிந்தித்து வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது அடுத்த பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தனது மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் அவர் நடித்து முடித்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் கதாநாயகர்களாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கின்றனர்.
இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் சூப்பர் ஸ்டார் இணைகிறார். இதனை, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. என்கவுண்டரை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாகவும், ஓய்வு பெற்ற அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
அத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாபச்சன் நடிப்பதாக கூறப்பட்டது. இது போக வில்லனாக பகத் பாசில் மிரட்ட இருக்கிறாராம். ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளாராம். முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும், ரித்திகா சிங்கும் இடம்பெற்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல் தலைவர் 170 திரைப்படம் குறித்த அப்டேட்டை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. அதில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, படத்தில் இளம் நடிகை துஷாரா விஜயன் இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் அறிமுகமான துஷாரா, முதல் படத்திலேயே பலராலும் பேசப்பட்டார். பின்னர், நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திலும் அவர் நடித்தார். இந்நிலையில் தற்போது துஷாரா, ரஜினி படத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





