சன் டிவியில் அசத்தப் போவது யாரு, விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு மற்றும் அது இது எது போன்ற காமெடி ரியாலிடி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். சினிமா நடிகர்களை போலவே மிமிக்ரி செய்யும் திறமையாளராக ரோபோ சங்கர், வாயை மூடிப் பேசவும் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் ரோபோ சங்கர் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அண்ணாத்த விஸ்வாசம் மாரி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கன்னிராசி கலகலப்பு 2 கடவுள் இருக்கான் குமாரு புலி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல படங்களில் ரோபோ சங்கர் நடித்திருக்கிறார்.
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். விஜய் கோச் ஆக உள்ள கால்பந்தாட்ட அணியில் ஒரு விளையாட்டு வீராங்கணையாக இந்திரஜா நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் நடிகை இந்திரஜா, தனது மாமா கார்த்திக்கை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமண வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலானது. மேலும் இந்திரஜா – கார்த்திக் தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது. இப்போது குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறித்து நடிகை இந்திரஜா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பேசிய நடிகை இந்திராஜா, அவரது கணவர் கார்த்திக் இருவரும் கூறியதாவது, தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனை திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கூறியிருந்தனர். மேலும் மத்திய அரசு மூளை செயல்படுத்துதல் பயிற்சி முறைக்காக தனியாக பட்ஜெட் ஒதுக்கி உள்ளது.
மேலும் குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அளித்துள்ள விளக்கத்தில், தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்து விட்டது எனக் கூறுவது ஆதாரம் அற்றது. ஹெகுரு பயிற்சி தொடர்பாக நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா வெளியிட்ட வீடியோவில் பல தவறான தகவல்கள் இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





