தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் காஜல் அகர்வால். குறிப்பாக சித்ரா தேவி பிரியா என்ற கேரக்டரில் அவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா கேரக்டரில் அவரது காமெடி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. விஜயுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார். விவேகம் படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமான வன்முறை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கு சுற்றுலா சென்று இருந்த 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய இந்த தாக்குதலுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உலக அளவில் அரசியல் தலைவர்களும் இதற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள் நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருப்பதாவது, பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து முஸ்லிம் இடையேயான பிரச்சனை கிடையாது. அதைத்தான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். அங்கு நடந்தது பயங்கரவாதத்துக்கும் மனித நேயத்துக்குமான மோதல்.
ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை எப்போதும் பயத்தையும் அதிக எதிர்ப்புணர்வையும் மட்டுமே உருவாக்கும். ஆனால் நாம் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒன்றுபட வேண்டும் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
வழக்கமாக பலரும் இந்த சம்பவத்துக்கு பழிவாங்க வேண்டும் என்ற ரீதியில் பேசியிருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் கூட, இனிமேல் இப்படி ஒரு பயங்கரவாதத்தை செய்ய அவர் யோசிக்கும் அளவுக்கு பதிலடி தர வேண்டும் என்ற ரீதியில்தான் பேசியிருந்தார். ஆனால் மாறுபட்ட கண்ணோட்டத்தில் இந்து முஸ்லிம் இடையேயான பிரச்சனை குறித்து தைரியமாக பேசியுள்ள நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.





