ரஜினிகாந்த் 1970களில் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். அவர் சினிமாவிற்கு வந்து 48 வருடங்கள் ஆகின்றன. இந்த 48 வருடங்களில் அவர் சந்திக்காத அவமானங்களோ தோல்விகளோ கிடையாது. அந்த அவமானங்களும் தோல்விகளும்தான் அவரை சூப்பர் ஸ்டாராக ஆக்கியது என்று கூறலாம்.

இத்தனை வருடங்களில் ரஜினிகாந்திற்கு எவ்வளவு அனுபவங்கள் இருந்திருக்கும். ஆனால் என்னதான் நீண்ட வருடங்கள் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் தவறான முடிவுகள் எடுப்பது மனித இயல்புதானே.
ரஜினிகாந்தும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்பது போல் ஒரு முறை ஒரு தவறான முடிவை எடுத்து படக்குழுவினருக்கு சற்று கவலையைத் தந்துள்ளார். அந்த சம்பவத்தைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

1989 ஆம் ஆண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, ராதா, ராதா ரவி, விணு சக்ரவர்த்தி உட்பட பலரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ராஜாதி ராஜா”. இத்திரைப்படத்தை ஆர்.டி.பாஸ்கர் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
ஆனால் அத்திரைப்படத்திற்காக மெட்டமைக்கப்பட்ட “நெஞ்சத்தை தொட்டு” என்ற பாடல் மற்றும் அதில் இடம்பெறவில்லையாம். அதாவது இந்த பாடலை கேட்ட சிலர், இந்த பாடல் மிகவும் மெலோடியாக இருப்பதாகவும் படத்தின் திரைக்கதைக்கும் இந்த பாடலுக்கும் செட் ஆகாது எனவும் கூறியிருக்கிறார். ரஜினிகாந்திற்கும் அவர்கள் சொன்னது சரி என்று பட்டதாம்.
ஆதலால் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனிடமும் தயாரிப்பாளர் பாஸ்கரிடமும் சென்று “இந்த பாடல் படத்தில் இடம்பெற வேண்டாம், அதனை நீக்கிவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார். ரஜினியே வந்து சொன்னதால் அவர்களும் சரி என்று கூறிவிட்டார்கள்.

படம் வெளியாவதற்கு முன்பு திரையிடப்பட்ட பிரிவ்யூ காட்சியில் அந்த பாடலும் இடம்பெற்றிருந்தது. அந்த பாடலை கேட்ட சிலர் “இந்த பாடல் அருமையாக இருக்கிறது” என கூறினார்களாம். ஆதலால் ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனரிடமும் தயாரிப்பாளரிடமும் சென்று “அந்த பாடலை நீக்க வேண்டாம், அந்த பாடல் அப்படியே இருக்கட்டும்” என்று கூறினாராம்.
ஆனால் ரஜினிகாந்த் கடைசி நிமிடத்தில் சொன்னதால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையாம். அந்த படம் அந்த பாடல் இல்லாமலே வெளியாகிவிட்டதாம்.





