நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். இளம் நடிகைகளில் பெயர் சொல்லும்படியான கேரக்டர்களில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று நிரூபித்தவர். இவரது அம்மா மேனகாவும், 1980களில் நடிகையாக இருந்தவர். நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்.
நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ், கேரளாவில் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். கீர்த்தி சுரேஷின் பாட்டி, கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜின் அம்மாவாக நடித்திருந்தார். இப்படி குடும்பமே சினிமா பின்னணி கொண்டதாக இருப்பதால், இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் ரஜினிமுருகன், பைரவா, சர்கார், அண்ணாத்த, சைரன் 108, ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சண்டக்கோழி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றவர். இதில் நடிகை சாவித்திரி கேரக்டரில், நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா என்ற படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் குறித்த பிரமோ நிகழ்ச்சிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபமாக கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த வதந்திகள் அதிகரித்து வருகின்றன. அவரது நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், பாராட்டுகளை எப்படி சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோமோ, அதே போல் விமர்சனங்களையும் வாழ்க்கையில் சந்தித்து தான் ஆக வேண்டும். என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு, என் குடும்பத்தார் குறித்தும், நடக்காத விஷயங்கள் குறித்தும் நடந்தது போல கதை கட்டி பேசுவதை நான் காதுகளில் போட்டுக்கொள்ளவே மாட்டேன்.
நடிகர் விஜய் சொன்னதை போல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால் வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும். அதனால் விஜய் சொல்லியிருப்பதை போல இதுபோன்ற வதந்திகளுக்கு நான் விளக்கம் கொடுக்க தயாாரக இல்லை என்று பேசியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படம் வெளியாவதை தொடர்ந்து, தமிழில் இன்னும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.





