வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் இயக்கத்தில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அம்மன் கேரக்டரில் கதையின் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். படத்தின் நாயகனாக இயக்குனர் சுந்தர் சி நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா இனியா அபிநயா நடிகர்கள் யோகிபாபு துனியா விஜய் கருடாராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இம்மாதம் 6ம் தேதி பட பூஜை நடந்த நிலையில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிக்க பல கண்டிசன்களை போடுவதாகவும் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறியதாகவும் காஸ்ட்யூம் பிரிவு உதவி இயக்குனர் தந்த ஆடைகளை அணிய மறுத்து திட்டியதாகவும் அதனால் அந்த உதவி இயக்குனர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
வழக்கமாகவே நயன்தாரா அவர் நடிக்கும் படங்களுக்கு பல நிபந்தனைகளை சொல்வார் என்றும் இதனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் சுந்தர் சி அப்செட்டில் இருப்பதால், விரைவில் நயன்தாராவை படத்தில் இருந்து நீக்கி விட்டு அவர் நடிகை தமன்னாவை அந்த கேரக்டரில் நடிக்க வைப்பார் என்றும் சில தினங்களாக இணையத்தில் தகவல்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த சூழலில் இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சியின் மனைவி நடிகை குஷ்பு தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, மூக்குத்தி அம்மன் 2 படம் பற்றி பல தேவையில்லாத வதந்திகள் பரவி வருகின்றன. தயவுசெய்து யாரும் அதை நம்ப வேண்டாம். படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் சுந்தர் சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
நடிகை நயன்தாரா திரைத்துறையில் தனது தகுதியை நிரூபித்த ஒரு நல்ல நடிகை. அவர் மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த வதந்திகள் எல்லாம் படத்துக்கு திருஷ்டி எடுத்த மாதிரி தான். நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும். உங்கள் ஆசிர்வாதத்தையும் அன்பையும் மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





