புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் சில நடிகைகள் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதில் ஜெயலலிதா சரோஜா தேவி கேஆர் விஜயா லதா போன்ற சில முன்னணி நடிகைகள் அதிக எண்ணிக்கையில் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். நடிகை லதாவை சினிமாவில் அறிமுகம் செய்ததே எம்ஜிஆர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் டைரக்ஷனில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உரிமைக்குரல் பல்லாண்டு வாழ்க நேற்று இன்று நாளை சிரித்து வாழ வேண்டும் நாளை நமதே நினைத்ததை முடிப்பவன் நீதிக்கு தலைவணங்கு உழைக்கும் கரங்கள் மீனவ நண்பன் என பல படங்களில் எம்ஜிஆருடன் நடிகை லதா இணைந்து நடித்திருக்கிறார். இப்போதும் படங்களில் வயதான கேரக்டரில் அம்மா பாட்டி வேடங்களில் லதா நடித்து வருகிறார்.
இயக்குனர் தங்கமணி என்பவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் பேராண்டி என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாட்டி கேரக்டரில் மூத்த நடிகை லதா நடித்திருக்கிறார். சென்னையில் பேராண்டி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய மூத்த நடிகை லதா கூறியதாவது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நான் அறிமுகமானேன்.
கடந்த 52 ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டு இப்போதும் நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கிறேன். பேராண்டி படத்தில் நான் பாட்டி கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். இதுதான் அவர் பாடிய கடைசி பாடல். மனரமா சொன்னதால்தான் இந்த படத்தில் நான் நடித்தேன்.
குளிரில் சரியான உடை கிடைக்காமல் பாடல் காட்சியில் தவித்ததாக படத்தில் நடித்த ஹீரோ இங்கு பேசும் போது சொன்னார். எனக்கும் இப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்திருக்கின்றன. என்டி ராமராவ் படத்தில் நடித்த போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. எனக்கு அவர்கள் தந்த உடை செட் ஆகவில்லை. அதனால் கடும் குளிரில் கஷ்டப்பட்டு நடித்தேன்.
அந்த காலத்தில் எல்லாம் படங்கள் தியேட்டரில் ஓடின. சில படங்கள் 200 நாட்கள் வரை ஓடியது. இப்போது செல்போனில் தான் படங்கள் ஓடுகின்றன. அதில் தான் மக்கள் அதிகமாக படம் பார்க்கிறார்கள் என்று மூத்த நடிகை லதா பேராண்டி பட நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





