பிரமேலு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் மமிதா பைஜூ. வணங்கான் படத்தில் சில காட்சிகளில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக கூறி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பிறகு இப்போது நடிகர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தில் மமிதா பைஜூ நடித்து வருகிறார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பகவந்த் கேசரி. இந்த படத்தின் ரீமேக்தான் ஜனநாயகன் படம் என்று சொல்லப்படுகிறது. பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு மகள் கேரக்டர் போல இந்த படத்தில் விஜய்க்கு மகளாக மமிதா பைஜூ நடிப்பதாக தகவல்கள் உள்ளன. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் இதயம் முரளி படத்தில் முதலில் மமிதா பைஜூதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டு ஜனநாயகன் படத்தில் மமிதா பைஜூ நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ளது போல கேரளா ஆந்திரா கர்நாடகா என பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கேரளாவைச் சேர்ந்த மமிதா பைஜூவும் விஜயின் மிகத் தீவிரமான ரசிகைதான். அந்த வகையில் ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக படப்பூஜை நிகழ்ச்சியில் விஜயை நேரில் சந்தித்தது குறித்து சமீபத்தில் மனம் திறந்து அவர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை மமிதா பைஜூ நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, விஜய் சாரை முதன் முறையாக நேரில் பார்த்த போது மிகவும் பதட்டமாகி விட்டேன். ஹாய் சார் என்று மட்டும் சொன்னேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. இதை தெரிந்துக்கொண்ட விஜய் அமைதியாக என்னை நோக்கி அருகில் வந்தார்.
என்னிடம் ஹாய் மா என்று சொன்ன விஜய் சார் என்னை அரவணைத்துக்கொண்டார். அந்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. விஜயின் ரசிகையாக என்னால் அந்த உணர்வை வெளிப்படுத்த முடியாது, என அந்த நேர்காணலில் நடிகை மமிதா பைஜூ கூறியிருக்கிறார்.





