ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம், எதிர்பார்த்ததை விட ஏகோபித்த வரவேற்ப்பை பெற, 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் அள்ளி சிங்க நடை போட்டது. படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், ரஜினிக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்தது.
இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் காரை வழங்கிய தயாரிப்பு நிறுவனம், ஜெயிலரில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு 2 கிராம் தங்கத்தை பரிசாக அளித்தது. ஜெயிலரின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், ரீ ரெக்கார்டிங் இல்லாமல் படத்தை பார்த்தபோது சுமாராகதான் இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் அனிருத் தனது இசையின்மூலம் படத்தை தூக்கி நிறுத்தி விட்டார். இப்போது ஜெயிலரை விட பெரிய வெற்றியை எப்படி கொடுக்க போகிறோம் என யோசித்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் ஜெயிலரை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் நாயகர்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, தனது 170வது திரைபடத்தில் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இதனை இயக்குகிறார்.
அக்டோபர் முதல் வாரத்தில் இதன் சூட்டிங் தொடங்குகிறது. திருவனந்தபுரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த ஞானவேல் திட்டமிட்டுள்ளாராம். இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறாராம். கன்னியாகுமரி பகுதியை கதைக்களமாக கொண்டு படம் எடுக்கப்படுவதால், குமரி தமிழில் சூப்பர் ஸ்டார் பேசுகிறாராம். இதில் ரஜினிக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறாராம்.
வில்லனாக பகத் பாசில் மிரட்ட இருக்கிறார். இதுபோக தெலுங்கு நடிகர் ராணாவுக்கு முக்கிய வேடத்தை ஞானவேல் கொடுத்துள்ளாராம். இந்த கூட்டணியில் தற்போது புதியதாக சேர்ந்திருக்கிறார் இறுதிச்சுற்று பட நடிகை ரித்திகா சிங். இவருக்கும் போலீஸ் அதிகாரி வேடம்தானாம். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து இவர் பணி புரிகிற மாதிரி திரைக்கதையை வடிவமைத்திருத்துள்ளாராம் ஞானவேல். இந்த தகவல்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் நிலையில், படக்குழுவின் அடுத்தக்கட்ட நகர்வுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.





