சீரியல் நடிகையாக சின்னத்துறையில் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகை மைனா நந்தினி. விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அவர் நல்ல வரவேற்பு பெற்றார். இந்த சீரியலில் மைனா என்ற கேரக்டரில் அவர் நடித்த பிரபலமானதால் அவரை மைனா நந்தினி என்று ரசிகர்கள் அழைத்தனர். அந்த பேரே அவருக்கு அடையாளமாக நிலைத்து விட்டது.
அதன்பிறகு அருள்நிதி நாயகனாக நடித்த வம்சம் என்ற படத்தில் மைனா நந்தினி காமெடி ரோலில் நடித்திருந்தார். இதில் கதாநாயகி சுனைனாவின் தோழியாக அவர் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற சில படங்களிலும் மைனா நந்தினி காமெடி ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
தற்போது நடிகை சினேகா நடத்தி வரும் சினேகாலயா சில்க்ஸ் போலவே, மைனா நந்தினியும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மேலும் தனது கணவர் யோகேஸ்வரனுடன் இணைந்து மைனா லிங்ஸ் என்கிற யூடியூப் சேனலை மைனா நந்தினி தற்போது தொடங்கி நடத்தி வருகிறார். இவருக்கு இந்த யூடியூப் சேனலில் 16 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து லவ் ஆக்சன் டிராமா என்ற மற்றொரு சேனலையும் தொடங்கிய மைனா நந்தினி, அதில் குறும்படங்களை வெளியிட்டு வந்தார். புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரில் நடித்து அதையும் தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அந்த வெப் தொடரை பாதியில் நிறுத்துவதாக மைனா நந்தினி அறிவித்துள்ளார். இது அவரது சப்ஸ்கிரைப்பர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
சமீபத்தில் தன் கணவருடன் இலங்கைக்கு சென்ற மைனா நந்தினி, தன்னுடன் படப்பிடிப்பு குழுவையும் அழைத்துச் சென்று புள்ளத்தாச்சி தொடருக்கான படப்பிடிப்பை இலங்கையில் 11 நாட்கள் நடத்தியுள்ளனர். பிறகு ஹார்ட் டிஸ்க்கில் படப்பிடிப்பு காட்சிகளை பதிவு செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். மொத்தமாக 800 ஜிபி அளவுக்கு புட்டேஜை இலங்கையில் படமாக்கி இருந்த நிலையில், அதை இந்தியா கொண்டு வந்த போது அந்த ஹார்ட் டிஸ்க் தவறுதலாக கீழே விழுந்து பலத்த சேதமடைந்துள்ளது.
அதன் பின்னர் அதை சிஸ்டத்தில் பதிவேற்றம் செய்து பார்த்தபோது, அதில் எந்த காட்சிகளும் வரவில்லை. இதனால் 11 நாட்களுக்கு மேல் இலங்கையில் நடத்தப்பட்ட புள்ளத்தாச்சி தொடருக்கான சூட்டிங் காட்சிகள் அனைத்தும் வீணாகி விட்டது. அதற்காக செய்த செலவுகள் என மொத்த பணத்தையும் இழந்துவிட்டதாக நடிகை மைனா நந்தினியும் அவரது கணவர் யோகேஸ்வரனும் வருத்தமாக தெரிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





