லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் தனது முதல் இன்னிங்ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அந்த சமயத்தில் சிம்புவுடன் காதல் பிறகு முறிவு, பிரபுதேவாவுடன் காதல் பிறகு முறிவு என இரண்டு காதல் பிரிவுகளை பார்த்தார். அந்த விஷயத்தில் நயன்தாராவை பலர் தனிப்பட்ட ரீதியாக விமர்சிக்க தொடங்கினர்.
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த நயன் ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்தார். அப்படி அவர் நடித்த அறம் படம் மெகா ஹிட்டானது. இந்த சூழலில் நானும் ரௌடிதான் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் குழந்தையையும் பெற்றுக்கொண்டார் அவர். அது சர்ச்சையாக விசாரணையின் முடிவில் அதில் எந்த விதிமீறலும் இல்லை என்று தெரியவந்தது. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒருவர் பெயர் உயிர், இன்னொர்வர் பெயர் உலக். சமீபத்தில்தான் அவர்களின் முகத்தை இன்ஸ்டாகிராம் மூலம் உலகத்துக்கு காண்பித்தார் நயன்.
குழந்தை பிறந்த பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் அவர் சமீபத்தில் ஜவான் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இறைவன் படத்திலும், தனது 75ஆவது படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இப்படி நடிப்பில் படு பிஸியாக இருக்கும் நயன் பிஸ்னெஸ்ஸிலும் தனது கவனத்தை திருப்பியவர். ஏற்கனவே லிப் பாம் கம்பெனி ஒன்றை நடத்திவரும் அவர் அண்மையில் திரையரங்கு ஒன்றை வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது வதந்தி என்று பின்னர் தெரியவந்தது.
அதேபோல் கேரளாவில் பல ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பை அவர் கட்டிவருவதாகவும்; அதனை வாடகைக்கு விடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது புதிய தொழில் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் ஸ்கின் கேர் ப்ராடக்ட்களை விற்பதற்கான 9 ஸ்கின் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் நயன் தாரா செப்டம்பர் 29ஆம் தேதி முதல் இந்த பிஸ்னெஸ் ஸ்டார்ட் செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்கு முன்னதாக இந்தியாவில் கத்ரீனா கைஃப்பும், உலக அளவில் கிம் கதார்ஷியனும் இந்த தொழிலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.





