நடிகர் விஜய், இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை இயக்குனர் வெங்கட்பிரபு எடுத்து வருகிறார். கடந்த 10 நாட்களாக விஜய், திருவனந்தபுரத்தில் தங்கி, அங்கு படம் பிடிக்கப்படும் காட்சிகளில் நடித்து வருகிறார். இடையிடையே ரசிகர்களை சந்திக்கிறார். அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
இந்த படத்துக்கு பிறகு விஜய், ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க தீர்மானித்து இருக்கிறார். அதன்பிறகு தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மட்டுமே கவனித்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். கட்சி பணிகள், நிர்வாகிகள் கூட்டம், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் என பல விஷயங்களை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புஸ்லி ஆனந்த் உள்ளிட்டோரிடம் அடிக்கடி ஆலோசிக்கிறார்.
வரும் 2026ம் ஆண்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பட்சத்தில் இன்னும் முழுதாக 2 ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தனது 69வது படத்துக்கு 60 நாட்கள் மட்டுமே கால்ஷீட் என அறிவித்துள்ளார் விஜய். 24 மாதங்களில், அதாவது 2 ஆண்டுகளில், 4 படங்களில் நடித்து விடலாமே, ஏன் ஒரு படம் மட்டுமே விஜய் நடிக்க நினைக்கிறார் என ரசிகர்கள் குழப்பமடைகின்றனர்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து முக்கிய இயக்குனர்களை சந்தித்து கதை கேட்கும் விஜய், நடுவுல ஒரு படம் பண்ணீட்டு வந்துடுங்களேன் என்றும் கூறி விடுகிறார். கதை பிடிக்கவில்லை, அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று முன்பு போல விஜய் சொல்லிவிட முடியாது. ஏனெனில் இப்போது நடிக்கும் இந்த 69வது படம்தான் தனது கடைசி படம் என ஏற்கனவே விஜய் தெளிவாக உறுதியாக கூறியிருக்கிறார்.
இப்படி விஜய், பெரிய பெரிய இயக்குனர்களை எல்லாம் நடுவுல ஒரு படம் பண்ணீட்டு வந்துடுங்க என குறிப்பிட காரணம், எந்த இயக்குனர் படத்தில் நடிப்பது, எந்த மாதிரியான கதையில் நடிப்பது என்பதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இன்னமும் குறிப்பிட்ட இயக்குனர் பெயரை சொல்லாமல் விஜய் இழுத்துக்கொண்டே போவது, சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் என்பது, கட்சி நிர்வாகிகள் மூலம் முன்னெடுப்பு செய்து, அது தன்னிச்சையாக நடக்கக் கூடியது. கட்சி பணிகளை விஜய் இப்போதைக்கு மேலோட்டமாக பார்த்துவிட்டு, அடுத்து நடிக்கிற படத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். ஏனெனில் கடைசி படம் லியோ, சுறா, குருவி மாதிரி அமைந்துவிடக் கூடாது என்பதில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மிக கவனமாக இருக்க வேண்டும். முதல்வன் படம் போல ஒரு மாஸ் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.





