இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நடிகர் ஜீவா நாயகனாகவும் நடிகர் நரேன் வில்லனாகவும் நடித்திருந்தனர். ஆனால் முகமூடி படம் சரியாக போகவில்லை. அதனால் தமிழில் பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு இல்லை.
அதனால் அவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். இதில் பல வெற்றிப் படங்களையும் முன்னணி ஹீரோக்களும் நடித்ததால் பிரபல நடிகையாக அவரது இமேஜ் உயர்ந்தது. இதையடுத்து அவர் மீண்டும் தமிழுக்கு வந்தார். முதலில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதன்பிறகு தொடர்ந்து தமிழில் அவர் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். விஜயுடன் அவர் நடித்த 2வது படமாக இது உள்ளது. ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்து டான்ஸ் மாஸ்டர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 4 படத்திலும் அவர் நடித்து வருகிறார். மேலும் இன்னும் சில தமிழ் படங்களில் பூஜா ஹெக்டே நடிக்க கமிட் ஆகியுள்ளார். வரும் 14ம் தேதி வெளியாக உள்ள கூலி படத்திலும் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ. 3 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஜனநாயகன் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பூஜா ஹெக்டே கூறியதாவது, ஜனநாயகன் படம் விஜயின் கடைசி படம் என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. விஜய் சாருடன் வேலை செய்வது மிகவும் ரிலாக்ஸான அனுபவமாக இருந்தது. அவர் எப்போதும் கூல் ஆக இருப்பார். விஜய்க்கு அவர் சூப்பர் ஸ்டார் என்பது தெரியும். ஆனால் அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடன் பணியாற்றுவது சந்தோஷமாக இருக்கும். அவர் மிகவும் ஸ்வீட்டாக இருப்பார்.
இப்போது இன்னும் பெரிய கனவுகளை நடிகர் விஜய் வைத்திருக்கிறார். அதை நோக்கி அவர் செல்ல வேண்டும் என்று நடிகர் விஜய் குறித்து பூஜா ஹெக்டே பேசியிருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வர் என்ற கனவுடன் இருப்பதால் அவருக்கு மறைமுகமாக தனது வாழ்த்துகளை நடிகை பூஜா ஹெக்டே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





