தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் ப பாண்டி ராயன் இட்லி கடை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என 4 படங்களை டைரக்ட் செய்து இருக்கிறார். மேலும் வொன்டர்ஃபார் பிலிம்ஸ் தயாிப்பு நிறுவனம் சார்பில் சொந்தமாக திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
இப்போது ஓம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். அடுத்ததாக லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்க தயாராகி உள்ளார். தமிழ் டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக மக்களுக்கு அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பிறகு சின்னத்திரை சீரியல்களில் நாயகியாக நடிக்க துவங்கிய அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதைத் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரத்னகுமார் இயக்கத்தில் மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா பவானி சங்கர் அந்த படத்தில் நடிகர் வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் விஷாலுடன் ரத்னம் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் யானை ருத்ரா டிமாண்டி காலனி 2 கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களிலும் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
இப்போது நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக இருமுடி என்ற படத்தில் அவர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் தனுஷ் குறித்து பேசி இருக்கிறார். அப்போது நடிகை பிரியா பவானி சங்கர் கூறியதாவது, நான் டிவியில் தொகுப்பாளராக இருந்த ஆரம்ப நாட்களில் நடிகர் தனுஷை நேர்காணல் செய்திருக்கிறேன்.
அப்போது தனுஷ் சோர்வாகவும் அந்த பேட்டியில் ஆர்வம் இல்லாதவராகவும் காணப்பட்டார். ஆரம்பத்தில் அவர் ஆக்ரோஷமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வதாக நான் நினைத்தேன். ஆனால் பின்னர் நான் சினிமாவில் நுழைந்து விளம்பரப் பணிகளில் சோர்வையும் திரும்பத் திரும்ப நேர்காணல்களையும் சந்தித்த பிறகு நடிகர்கள் சில சமயங்களில் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.
பின்னர் நான் தனுஷை சந்தித்து அவரிடம் வெளிப்படையாக இதுகுறித்து பேசினேன். உண்மையிலேயே நீங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டீர்கள் என்றுதான் நான் நினைத்தேன் என்று அவரிடம் சொன்னேன் என்று அந்த நேர்காணலில் நடிகை பிரியா பவானி சங்கர் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





