தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். துவக்கத்தில் செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கிய பிரியா பவானி சங்கர், இயக்குனர் ரத்னக்குமார் இயக்கிய மேயாத மான் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
மேயாத மான் படத்தில் நடிகர் வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், யானை, மான்ஸ்டர், ருத்ரன், ரத்னம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி ஷங்கர் நடித்த டிமாண்டி காலனி 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜீவா நடித்த பிளாக் என்ற படம் வருகிற 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஒரு நாள் இரவில் நடக்கும் த்ரில் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு பிளாக் படம் உருவாக்கப்பட்டுள்ளது. டைரக்டர் பாலசுப்ரமணி இயக்கி உள்ள இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.
புதிய கேடட் கம்யூனிட்டியில், முதல் ஆளாக வீட்டை வாங்கிக் கொண்டு ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் தம்பதி அந்த வீட்டில் குடியேறுகின்றனர். அப்போது வீட்டில் அவர்கள் இருக்கும் போது ஏற்படும் அமானுஷ்யங்கள், அவர்களை திக்குமுக்காடி திகிலடைய வைக்கின்றன. இது ஒரு பக்காவான திரில்லர், திகில் படமாக இருக்கும் என்று தெரிய வருகிறது. படத்தின் பிரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிரியா பவானி ஷங்கர் பங்கேற்றார். அப்போது அவரிடம், நீங்கள் எப்போதுமே நோ சொல்கிற விஷயம் எது என்று ஒரு கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்த பிரியா பவானி ஷங்கர், என்னுடைய உடம்பை என்றைக்கும் ஒரு பொருளாகவோ, வியாபாரமாகவோ நான் காட்ட மாட்டேன். அதை பிரதானமாக்கும் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. நெகட்டிவ் ரோலாக இருந்தாலும் நடிப்பது என் வேலை. அது நடிப்பு சார்ந்த விஷயம். ஆனால் என் உடலை வியாபார பொருளாக காட்டி அதன்மூலம் நான் பயனடைய மாட்டேன்.
பேஷன் என்ற பெயரில் ரசிகர்களுக்கு அப்படி ஒரு விஷயத்தை நான் கடத்த விரும்பவில்லை. திரும்பி பார்க்கிற போது, ஒரு தப்பான விஷயத்தை ரசிகர்களுக்கு தந்து விட்டோமே என்று எனக்கு தோன்றி விடக் கூடாது. என்று கூறியுள்ளார். சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர், அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவும் திகில் படம்தான். அதேபோல் பிளாக் படமும் பெரிய வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





