இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த படம் செம்பருத்தி. 1990களில் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. தொடர்ந்து தமிழில் ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் என அப்போதைய பல முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரோஜா வலம் வந்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான வெற்றி படங்களில் நடிகை ரோஜா நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகை ரோஜா, ஆந்திராவில் அரசியல் களத்தில் குதித்தார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நடிகை ரோஜா தற்போது இருந்து வருகிறார்.
கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடிகை ரோஜா சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார். ஆனால் இந்த முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை தழுவியது. இப்போது ஆந்திராவில் துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன்கல்யாண் குறித்து தொடர்ந்து நடிகை ரோஜா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, சிலர் டைம் பாஸூக்கு அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நாள் படப்பிடிப்பு அடுத்த நாள் ஆன்மீகப் பயணம் என்று பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் பவன் கல்யாணை மறைமுகமாக அவர் விமர்சித்து பேசியிருந்தார். அடுத்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரோஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நடிகை ரோஜா கூறியதாவது, அரசியலுக்கு நடிகர்கள் வருவதை நான் எதிர்க்கவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நல்ல எண்ணத்துடன் வரவேண்டும். நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு காங்கிரஸில் இணைந்து விட்டார். இதனால் அவரை நம்பி வந்த கட்சி நிர்வாகிகளெல்லாம் ரோட்டில் நின்றார்கள்.
அதனால் நடிகர் விஜய், எம்ஜிஆர் ஜெயலலிதா போன்று தன்னை நம்பி வரும் தொண்டர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பைட் பண்ண வேண்டும். கட்சியை இடையில் விட்டு விட்டு ஓடி விடக்கூடாது. தொண்டர்களை ரோட்டில் விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்து என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





