இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். இதற்கு ஜி ஸ்குவாட் என பெயர் வைக்கப்பட்டது. தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவர் முதல் முறையாக தயாரித்த திரைப்படம் ஃபைட் கிளப். உறியடி திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்த விஜயகுமார் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. சரிவர அந்த திரைப்படம் எடுக்கப்படாததால் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பென்ஸ் என்னும் திரைப்படம் எடுக்க போவதாக அறிவிக்கப்பட்டது. ராகவா லாரன்ஸ் இதில் கதாநாயகனாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதலில் இதனை லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்தினகுமாரே இயக்குவார் என்று பலரும் பேசியிருந்த வேளையில், அறிவிப்பிலேயே அது இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ மற்றும் கார்த்தியை வைத்து சுல்தான் ஆகிய திரைப்படங்களை எடுத்த பாக்யராஜ் கண்ணன் இதனை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சாய் அபயங்கர் இதற்கு இசை அமைப்பதாகவும் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ்.
அதுமட்டுமல்லாமல், பென்ஸ் திரைப்படம் எல் சி யூ பார்மெடிற்குள் வருவதாக அறிவிக்கப்பட்டது பலரது எதிர்பார்ப்பையும் தூண்டியது. இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படம் இணையத்தில் பேசுபொருளானது. இதில் வில்லனாக மலையாள நடிகர் நிவின்பாலி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. உடல் முழுக்க நகை அணிந்து கொண்டு இருக்கும் அவரது தோற்றமே பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படியான சூழலில், அண்மையில் பென்ஸ் திரைப்படத்திலிருந்து ஒரு புதிய தகவல் வெளியானது. அதாவது, ரவி மோகன் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க பென்ஸ் திரைப்படத்தின் சூட்டிங் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
இப்படியான சூழலில் படத்தில் நடிகை சம்யுக்தா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் ஃபேமஸான நடிகை சம்யுக்தா, தமிழில் தனுஷ் உடன் இணைந்து வாத்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இருப்பினும் அவர் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.





