தமிழ் சினிமாத் துறையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் செயல்படுகிறது. இதன் தலைவராக நடிகர் நாசர், பொதுச்செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இது போலவே மலையாள சினிமாத்துறையிலும் நடிகர்கள் சங்கம் உள்ளது. அம்மா என்ற பெயரில் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அந்த சங்கத்தின் தலைவராக மலையாள பட முன்னணி நடிகர் மோகன்லால் பதவி வகித்து வந்தார். கேரளாவில் சில நடிகைகள், சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நீதிபதி ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கை விவகாரங்களால் பெரிய பிரச்னை மலையாள சினிமாத்துறையில் உருவானது.
இந்த விவகாரங்களை அடுத்து நடிகர் மோகன்லால் தன்னுடைய அம்மா சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அம்மா சங்கத்தின் மற்ற நிர்வாகிகளும் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
முன்னதாக நடந்த அம்மா சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் அம்மா சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் மோகன்லால் இனி தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதையடுத்து நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட மலையாள நடிகை ஸ்வேதா மேனனும் விண்ணப்பம் அளித்திருக்கிறார்.
மலையாள படத்தில் கடந்த 1990களில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா மேனன். மலையாளத்தில் மட்டுமின்றி இந்தியிலும் பெரும்பாலான ஹிட் படங்களில் அவர் நடித்திருக்கிறார். தமிழில் அரவான் சினேகிதியே துணை முதல்வர் நான் அவன் இல்லை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது சிறப்பான நடிப்புக்காக கேரள மாநில அரசின் விருதுகளை 2 முறை பெற்றுள்ளார். ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீ மேக்கில் நடித்துள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து ஸ்வேதாமேனன் பங்கேற்று வருகிறார். இவர் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான நேரத்தில் நடிகர் சங்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அதோடு பொதுக்குழுவில் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று கூறியவர்களில் ஸ்வேதா மேனனும் ஒருவர். மோகன்லால் தலைவர் பதவி விலகியதை தொடர்ந்து தலைவர் பதவிக்கு போட்டியிட பலரும் விண்ணப்பித்த நிலையில், தற்போது நடிகை ஸ்வேதா மேனனும் தலைவர் பதவிக்கு வர ஆசைப்பட்டு விண்ணப்பம் அளித்திருக்கிறார்.





