தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். குறிப்பாக வாலி படம் அவருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பிரியமானவளே பஞ்சதந்திரம் பம்மல் கே சம்பந்தம் ரமணா அவள் வருவாளா துள்ளாத மனமும் துள்ளும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். சிம்ரனுக்கு இடையழகி என்ற பெயரும் உண்டு.
இதில் கண்ணெதிரே தோன்றினாள் ஜோடி நியூ வாரணம் ஆயிரம் கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் நட்புக்காக பார்த்தேன் ரசித்தேன் அரசு ஏழுமலை உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் சிம்ரனுக்கு வரவேற்பை பெற்றுத் தந்த படங்களாக இருந்தன. யூத் படத்தில் விஜயுடன் ஆடிய ஆல்தோட்ட பூபதி பாடலும், பிதாமகன் படத்தில் சிம்ரன் ஆடிய தகதக தக என ஆடிவா பாடலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன.
திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்தார். சேவல் சீமராஜா படங்களில் நடித்திருந்தார். மேலும் பேட்ட படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிம்ரன் சற்று முதுமையான தோற்றத்தில் காணப்பட்டாலும் அவரது ரசிகர்கள் மீண்டும் அவரது வருகையை தமிழ் சினிமாவில் ரசிக்கவே செய்தனர்.
இந்த சூழலில் நடிகர் பிரசாந்த் தி கோட் படம் மூலம் தனது 2வது சுற்றை ஆரம்பித்தார். அவர் தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்தார். இதில் வில்லி கேரக்டரில் சிம்ரனின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்போது அஜீத்குமார் நடிப்பில் வெளியான குட்பேட் அக்லி படத்திலும் சிம்ரன் நடித்திருந்த நிலையில் அந்த படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
அதே போல் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் டூரிஸ்ட் பேமிலி படமும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. படம் வெளியான 20 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 53 கோடியும், உலகளவில் 78 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. இப்படி அந்தகன் குட்பேட் அக்லி டூரிஸ்ட் பேமிலி என சிம்ரன் நடித்த 3 படங்களும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை தந்திருக்கிறது.
அடுத்து சிம்ரன் நாயகியாக நடித்த தி லாஸ்ட் ஒன் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தயாரிப்பது சிம்ரனின் கணவர் தீபக் தான். இது திகில் கலந்த பேண்டசி படமாக உருவாகியுள்ளது. சிம்ரனின் கணவர் தீபக், ஏற்கனவே ஓடு ராஜா ஓடு என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. தொடர்ந்து சிம்ரன் பல படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். கணவர் தீபக், சிம்ரன் ஆகியோரை தொடர்ந்து சிம்ரனின் மகன்களும் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





