தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடித்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்று விடுகின்றனர். சினிமாவை விட்டு பல ஆண்டுகள் விலகி இருந்தாலும், மீண்டும் அவர்கள் நடிக்க வரும்போது பழைய வரவேற்பும், ஆர்வமும் ரசிகர்களிடம் வந்துவிடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு நடிகையாக, ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக இருப்பவர் புன்னகை அரசி சினேகா. தமிழில் விரும்புகிறேன் என்ற படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். கேஆர் விஜயாவுக்கு பிறகு தமிழில் நடிக்க வந்த பல நடிகைகளுக்கு மத்தியில் சினேகாவுக்குதான் புன்னகை அரசி என்ற பட்டம் கிடைத்தது.
தொடர்ந்து என்னவளே, ஆனந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், பம்மல் கே சம்பந்தம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, சின்னா, போஸ், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், வசீகரா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
ஒரு கட்டத்துக்கு வேலைக்காரன், பட்டாஸ் போன்ற படங்களில் கேமியோ ரோல் போல சில காட்சிகளில் நடித்த சினேகா, அதன்பிறகு டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களில் அதிகமாக பங்கேற்கிறார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் அப்பா விஜய் கேரக்டருக்கு மனைவியாக சினேகா நடித்திருந்தார். இப்போது சினேகா, புதிய ஜவுளிக்கடை ஒன்றை சினேகாலயா என்ற பெயரில் சென்னையில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகா முன்னணி நடிகையாக இருந்த காலகட்டத்தில், குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து வந்தார். அதிகம் கவர்ச்சி காட்டாமல் நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஆனால் அப்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சினேகா கூறுகையில், புதுப்பேட்டை படத்தின் கதையைக் கேட்டதும் முதலில் இந்த படத்தில் நடிப்பதா வேண்டாமா என்று எனக்கு தயக்கம் வந்தது. அப்போது என் அப்பாவும் அருகில் இருந்தார். கதையைக் கேட்டதும் இதில் நடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். என்னுடைய அப்பா, சில இந்தி நடிகைகளின் பெயரைச் சொல்லி அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான வேடங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சொன்ன விதம் பார்த்தால், உன் கேரக்டரை அவர் தவறாக காண்பிக்க மாட்டார் என எனக்கு தோன்றுகிறது என்று நம்பிக்கையாக கூறினார். என் அப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். அவரே சொன்னதால்தான் புதுப்பேட்டை படத்தில் நான் அந்த கேரக்டரில் நடித்தேன் என்று சினேகா கூறியிருக்கிறார்.





