நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் 130க்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில், இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக 10க்கும் குறைவான படங்களே ரசிகர்களின் கவனத்தை பெற்றன. அதிலும் 3 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் என்ற வசூலை கடந்துள்ளன. அந்த அளவுக்கு தமிழ் படங்களின் தரம் பின்தங்கி வருவது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது.
கடந்த ஏழு மாதங்களில் இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன் ஆகிய 3 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி என்ற வசூலை கடந்திருக்கின்றன. பெரிய அளவில் எதிர்பார்த்த லால் சலாம், அயலான், இந்தியன் 2, சிங்கப்பூர் சலூன், ஸ்டார் போன்ற படங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்துவிட்டன.
ஆனால் மலையாளத்தில் வெளியான படங்கள், நடப்பாண்டில் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டன. குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, ஆவேசம் போன்ற படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டன. மலையாள படங்கள் பெற்ற வெற்றியை பார்த்து, தமிழ் சினிமா பின்தங்கி விட்டதாகவே ரசிகர்கள் விமர்சிக்க துவங்கி விட்டனர்.
இந்நிலையில் ராயன், மகாராஜா, அரண்மனை 4 படங்கள் பெற்ற வெற்றியால் தமிழ் சினிமா குதூகலமடைந்துள்ளது. இனி தங்கலான், தி கோட், வேட்டையன், தக்லைப், விடாமுயற்சி, கங்குவா, குபேரா, கொட்டுக்காளி, விடுதலை 2, டிரெயின் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2 படங்கள் மிக அதிக அளவிலான லாபம் தந்திருக்கின்றன. ஆனால் அந்த படங்கள் 1000 கோடி ரூபாயை வசூலை ஈட்டிய கல்கி 2898 ஏடி படம் இல்லை. அதே போல் 225 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்படும் மஞ்சும்மெல் பாய்ஸ் படமும் கிடையாது என்பதும் கவனிக்கத்தக்கது. மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியான 2 படங்கள்தான், குறைந்த பட்ஜெட்டில், மிக அதிக லாபம் தந்திருக்கின்றன.
கடந்தாண்டில் வௌியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிரேமலு. இந்த படம் ரூ. 136 கோடி வசூல் செய்தது. படத்தின் பட்ஜெட் ரூ. 3 கோடி என்ற நிலையில், 45 மடங்கு அதிக வசூலை இந்த படம் குவித்துள்ளது. அதே போல் தெலுங்கில் வெளியான ஹனுமன் படம், 350 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்ற நிலையில், 77.5 சதவீதம் அதிக லாபம் அடைந்துள்ளது. ஆனால் கல்கி 2989 படம் 70 சதவீதம் மட்டுமே பட்ஜெட்டை விட அதிக லாபமடைந்துள்ளது.





