தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர் நடிகை கேஆர் விஜயா. அவர் சிரிப்பு என்பது முகம் முழுக்க மலர்ச்சியும் கொள்ளை அழகையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். கேஆர் விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா தான். ஏனெனில் இவரது சிரிப்பழகும் ரசிகர்களின் மனதை எளிதாக கொள்ளை கொண்டு விடுகிறது.
நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக விரும்புகிறேன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஆனந்தம் மின்னலே பம்மல் கே சம்பந்தம் புதுப்பேட்டை வசூல் ராஜா எம்பிபிஎஸ் போஸ் ஏப்ரல் மாதத்தில் பார்த்திபன் கனவு வசீகரா என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுக்கும் சினேகாவுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். ஒரு மகன் ஒரு மகள் இந்த நட்சத்திர தம்பதிக்கு உள்ள நிலையில், சினேகா இப்போது படங்களில் குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக விஜய் நடித்த தி கோட் படத்திலும், சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்திலும் சினேகா நடித்திருந்தார். டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வரும் சினேகா, சென்னையில் சொந்தமாக சினேகாலயா சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அடிக்கடி திருப்பதி திருவண்ணாமலை என கோவில்களுக்கு விசிட் செய்கிறார்.
நேர்காணலில் ஒன்றில் பங்கேற்ற நடிகை சினேகா கூறியதாவது, நான் ஒருமுறை அணிந்த ஆடையை அடுத்த முறை அணிய மாட்டேன். இதற்கு காரணம் ஏற்கனவே அணிந்த ஆடையை மீண்டும் அணிந்து ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டேன். அப்போது அணிவதற்கு வேறு ஆடை இல்லாததால் சினேகா, அணிந்த ஆடையையே மீண்டும் அணிந்து வந்துவிட்டார் என்று எழுதிவிட்டார்கள். இது எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது.
அன்று முதல் ஒருமுறை அணிந்த ஆடையை அடுத்த முறை அணியவே கூடாது என்ற முக்கிய முடிவை எடுத்துவிட்டேன். நான் உடுத்துவது எல்லாமே விலை உயர்ந்த ஆடைகள்தான். என்றாலும் ஒருமுறை நான் அணிந்துவிட்டால் அதை நண்பர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கொடுத்து விடுவேன் என்று நடிகை சினேகா கூறியிருக்கிறார். ஜவுளிக்கடை திறந்ததற்கு கூட இதுதான் காரணமோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





