தமிழில் பல படங்களில் கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சோனா. தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் சோனா நடித்திருக்கிறார். நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக குசேலன் படத்தில் சோனா நடித்திருந்தார். அதே போல் அழகர் மலை படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சோனா, குசேலன் படத்தில் நடித்த பிறகு 16 படங்களில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் கூட இனி வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நடிகை சோனா, சென்னையில் உள்ள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு பெப்ஸி அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ஹார்டு டிஸ்க்கை மீட்டுத் தர கோரிக்கை விடுத்து சோனா போராட்டத்தில் ஈடுபட்டது பிறகு தெரிய வந்தது.
இதுகுறித்து நடிகை சோனா கூறியதாவது, நான் ஸ்மோக் என்ற பெயரில் எனது வாழ்க்கை வரலாறை ஸ்மோக் என்ற வெப் சீரிஸ் டைரக்ட் செய்து இருக்கிறேன். இந்த வெப் சீரிஸை தொடரக்கூடாது என்றும் அதை வெளியிடவும் கூடாது என்றும் என்னை சிலர் மிரட்டி வருகின்றனர்.
இப்போது நான் எடுத்த ஸ்மோக் பயோபிக் வெப் சீரிஸ் ஹார்டு டிஸ்க்கை எடுத்து வைத்துக்கொண்டு தர மறுக்கின்றனர். எங்களிடம் மேலாளராக வேலை செய்த சங்கர் என்பவர் 8 லட்சம் ரூபாய் வரை என்னிடம் பண மோசடி செய்துள்ளார். அது பற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு பெப்ஸியிடம் முறையிட்டிருந்தேன்.
இது நம்ம குடும்பம் ஆச்சே, நமக்கு நிச்சயம் உதவுவார்கள் என்று காத்திருந்தேன். ஆனால் இதுவரை எனக்கு யாரும் உதவவில்லை. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு என்னுடைய ஹார்டு டிஸ்க் வேண்டும், என்னுடைய பணமும் வர வேண்டும். அதுவரை எத்தனை நாட்கள் ஆனாலும் தினமும் வந்து பெப்ஸி அலுவலகம் முன் நான் போராடுவேன் என்று நடிகை சோனா கூறியிருக்கிறார்.





