தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுகன்யா. தொடர்ந்து சோலையம்மா சின்னக்கவுண்டர் திருமதி பழனிசாமி இந்தியன் மகாநதி சின்ன மாப்ளே என பல படங்களில் சுகன்யா நடித்தார்.
எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை தருபவர் நடிகை சுகன்யா. குறிப்பாக இந்தியன் படத்தில் கமலுக்கு இணையாக அமிர்தவல்லி கேரக்டரில் சுகன்யாவின் நடிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. இந்தியன் தாத்தா கமல் போலவே நடிகை சுகன்யாவும் இந்த படத்தில் மூதாட்டி கேரக்டரில் அதுபோன்ற தோற்றத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சுகன்யா ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்பது சினிமா ரசிகர்கள் பலரும் அறியாத விஷயம். சென்னையில் பல மேடைகளில் பரங்கநாட்டிய நிகழ்ச்சிகளை சுகன்யா அரங்கேற்றம் செய்திருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த நடிகை சுகன்யா, ஒரே ஆண்டில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு சில படங்களில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து சுகன்யா நடித்து வந்தார்.
இதற்கிடையே நடிகை சுகன்யா சில டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் திருமணம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சேரன் டைரக்ட் செய்திருந்தார். அவ்வப்போது திருவண்ணாமலை மதுரை போன்ற பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சுகன்யா இறைவழிபாடு செய்யும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை சுகன்யா கூறியதாவது, மகாநதி படத்திற்கு முன் சினிமா துறை சார்பில் இருந்து ஒரு நடன நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நான் சிங்கப்பூருக்கு கமலுடன் போயிருக்க வேண்டும். ஆனால் என்னால் போக முடியவில்லை. அந்த புரோகிராம் என்னால் செய்ய முடியவில்லை. மூன்று ரிகர்சல்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் பொள்ளாச்சி கோபிசெட்டிபாளையத்தில் ஷூட்டிங்கில் நான் பிஸியாக இருந்ததால் ஒத்திகைக்கு செல்ல முடியவில்லை. அதனால் கமலுடன் இனி வேலையே பண்ண முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் மகாநதி இந்தியன் என்ற 2 படங்கள் அவருடன் சேர்ந்து நடித்தேன் என்று நடிகை சுகன்யா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





