இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம். இந்த படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் டாப்ஸி பன்னு. இந்த படத்தில் அவருக்கு நடிகை ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடுகளம் படத்தை தொடர்ந்து வந்தான் வென்றான் காஞ்சனா 2 ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் டாப்ஸி நடித்தார். ஆனால் ஆடுகளம் அளவுக்கு மற்ற படங்களில் குறிப்பிடும்படியான கேரக்டர் அமையவில்லை. அதன்பிறகு பாலிவுட்டுக்கு அவர் சென்றார். இப்போது இந்தி சினிமாவில் டாப்ஸி நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை டாப்ஸிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பாட்மிண்டன் வீரர் மதியாஸ்போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை டாப்ஸி பங்கேற்றார். அப்போது அவர் தனது தலைமுடியால் படங்களில் நடிக்கும் போது ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேசினார்.
அப்போது நடிகை டாப்ஸி கூறியதாவது, எனக்கு தலையில் முடி நீளமாக இல்லாமல் சுருள்முடியாக இருக்கும். அதனால் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்தேன். முடி நேராக இருந்தால் தான் கிளாமராக இருக்கும் என எல்லா இயக்குனர்களும் நம்புகிறார்கள்.
அதனால் என்னை பார்த்ததும் இயக்குனர்கள், என்னுடைய முடியை ஸ்ட்ரைட் ஆக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்பார்கள். சுருள் முடி எப்போதும் பிரச்னைக்குரிய ரோலுக்கு தான் செட் ஆகும். நல்ல கேரக்டர் ரோலுக்கு அது சரியாக வராது என்று சொல்வார்கள்.
அவர்கள் சொல்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதால் இயக்குனர் சொல்வதை ஏற்றுக்கொள்வேன். அதனால் என் தலைமுடியை ஸ்ட்ரைட்டன் ஆக்கிக் கொண்டு படப்பிடிப்புக்கு வருவேன். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரத்தில் நடிக்கும் போதும் கூட இதையே தான் அந்த இயக்குனர்களும் என்னிடம் சொல்வார்கள் என்று நடிகை டாப்ஸி அதில் கூறியிருக்கிறார்.





